பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

558

அறத்தின் குரல்

துட்டத்துய்ம்மனும் மட்டுமே அங்கு உறங்கிக்கொண்டிருந்தனர். உறங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்வது பாவம். ஆனால் அசுவத்தாமனின் ஆத்திரத்தில் பாவத்தையும் புண்ணியத்தையும் கவனிக்க நேரம் ஏது? துட்டத்துய்ம்மனைத் தூங்கிக் கொண்டிருக்கும் போதே வெட்டிப் படுகொலை செய்தான் அவன். அந்தச் சப்தத்தில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட சிகண்டி முதலிய பாஞ்சால தேசத்து வீரர்கள் அசுவத்தாமன் மேல் பாய்ந்தனர். ஆனால் தன்னிடமிருந்த ஆயுதத்தால் அவர்களையும் கொலை செய்தான் அவன். அப்போது பாண்டவர் சகோதரர்களின் புதல்வர்கள் ஐந்து பேரும் எழுந்திருந்து அசுவத்தாமனைத் தாக்க முயன்றனர். பாண்டவர்களின் புதல்வர்களும் பார்ப்பதற்குப் பாண்டவர்களைப் போலவே இருந்ததனால் அசுவத்தாமன் அவர்களையே பாண்டவர்கள் என்று எண்ணிக் கொண்டான். எனவே துரியோதனனிடம் வாக்களித்திருந்தபடி அவர்கள் ஐந்து பேருடைய தலைகளையும் அறுத்துத் தள்ளிவிட்டான். இளம் பாண்டவர்களாகிய ஐவரின் மக்களை அசுவத்தாமன் கொன்ற செய்தியை அறிந்து சோழமன்னனும் அவனுடைய வீரர்களும் குமுறி எழுந்தனர். அசுவத்தாமனை எதிர்த்தனர். ஆனால் அசுவத்தாமனிடம் இருந்த தெய்வீக அஸ்திரத்தால் சோழனும் அவன் படைகளும் தோற்று ஓட நேர்ந்தது. பாண்டவர்கள் பாசறையிலிருந்த யாவரையும் வென்று முடித்தபின் இளம் பாண்டவர்களின் ஐந்து தலைகளையும் எடுத்துக்கொண்டு சமந்தபஞ்சக மலைக்குக் கிளம்பினான் அசுவத்தாமன். சமந்தபஞ்சக மலையை அடைந்து துரியோதனன் கிடந்த பூந்தோட்டத்திற்குள் நுழைந்து, “துரியோதனா! இதோ என் சபதத்தை நிறைவேற்றிவிட்டேன். உன்னிடம் கூறிவிட்டுச் சென்றபடி பாண்டவர்களின் தலைகளை - அறுத்துக்கொண்டு வந்துவிட்டேன்” என்று கூறித் தலைகளை அவன் முன் வீசி எறிந்தான். அதைக் கண்டதும் துரியோதனனுடைய முகத்தில் மகிழ்ச்சி மலரும் என்று எதிர்பார்த்தான் அசுவத்தாமன்.