பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

277

போகிறவளையும் உடன் வைத்து எரிக்க வேண்டும்” என்று தங்களுக்குள் தீர்மானித்துக் கொண்ட அவர்கள் உடனே அந்தப்புரத்திற்கு ஓடிப் பலவந்தம் செய்து உயிரோடு தீயிலிடுவதற்காக விரதசாரிணியை இழுத்துக் கொண்டு வந்தார்கள். விரதசாரிணி அவர்கள் செய்த துன்பம் பொறுக்க முடியாமல் ‘குய்யோ முறையோ’ என்று உரத்த குரலில் கூக்குரலிட்டாள்.

மடைப்பள்ளியில் உறங்கிக் கொண்டிருந்த வீமன் இந்தக் குரலைக் கேட்டு விழித்துக் கொண்டு ஓடி வந்தான். கீசகனுடைய தம்பிமார்கள் திரெளபதியை இழுத்துச் செல்வது கண்டு ஆத்திரத்தோடு அவர்கள் மேல் தாவிப் பாய்ந்தான். ஒவ்வொருவராக வீமன் கையிலிருந்து ‘விண் விண்’ என்று குத்துகளை வாங்கிக் கொண்டே வீழ்ந்தனர். பொங்கி எழும் ஆத்திரத்தோடு நீண்ட நேரம் போர் செய்து கீசகன் தம்பிமார்களைக் கூண்டோடு விண்ணுலகுக்கு அனுப்பிய பின்பே வீமன் ஓய்ந்தான். பின்பு மனமகிழ்ச்சியோடு திரெளபதி தன்னிடத்திற்கும், வீமன் சமையலறைக்குமாக இருவரும் சென்றனர். பொழுது புலர்ந்ததும் கீசகனும் தம்பிமார்களும் இறந்த செய்தி ஊரெல்லாம் பரவியது. சுதேஷ்ணையும் விராடனும் வருந்தினார்கள். திரெளபதியோ தொல்லைகள் நீங்கிய புது மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள்.

3. பகைவர் சோதனை

கீசகனும் அவன் தம்பியர்களும் அழிந்ததைப் பற்றி விரதசாரிணியையோ, பலாயனனையோ, யாரும் ஐயுறவில்லை. விரதசாரிணியின் கற்பைக் காவல் புரிந்து வந்த கந்தருவர்களே அவர்களைக் கொன்றிருக்க வேண்டுமென்று பேசாமல் இருந்துவிட்டனர். தன் சுகத்துக்கெல்லாம் காரணமாக இருந்த தம்பி போய்விட்டானே என்று சுதேஷ்ணையின் மனம் மட்டும் சில நாட்களுக்குப் பெருங்கவலையில் ஆழ்ந்திருந்தது. விராட