பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

அறத்தின் குரல்

பொருட்டு நீ செய்வாயா? உன் கையால் உதவி பெறுவதில் எனக்கு ஒரு பெருமை அப்பா! ‘மாட்டேன்’ என்று சொல்லாமல் இந்தக் கிழவனின் வேண்டுகோளை நிறைவேற்று” அவனுடைய பேச்சு அர்ச்சுனனின் இதயத்தை உருக்கிப் பிழிந்தது. அம்பறாத் தூணியிலிருந்து ஒரு அம்பை எடுத்து நட்டு அதன் மேல் உயரமாகவும் அணைவாகவும் வீட்டுமனின் தலையைத் தூக்கி வைத்தான். அர்ச்சுனன் இதைச் செய்து முடிந்ததும் நன்றி தவழும் கண்களால் அவனை ஆவல் ததும்பப் பார்த்தான் வீட்டுமன். அர்ச்சுனன் தலையை குனிந்து கொண்டான்.

“அப்பா துரியோதனா! கலக்கத்தையும் குழப்பத்தையும் இனிமேல் விட்டுவிடு. வீணே நீ எதற்காகக் கண்ணீர் சிந்துகிறாய்! என் காலமோ முடிந்து கொண்டிருக்கிறது. மேலும் போரை நிர்வகித்து நடத்துவதற்கு தகுதிவாய்ந்த படைத் தலைவனைத் தேடிக் கொள்! உன் மனத்தின் ஆசைகளையும் இந்த அந்திம காலத்திலும் நான் உணர முடிகிறது! எனக்கு அடுத்தபடியாக உன் கூட்டத்தில் கர்ணன் தான் சிறந்தவன். வில் வித்தையிலும் போர்த்திறமையிலும் நிகரில்லாத தகுதி உடையவன். அவனைப் படைத்தலைவனாக நியமித்துக் கொள். என் வார்த்தையை நிறைவேற்று.”

சம்மதத்திற்கு அடையாளமாக துரியோதனன் தலையை அசைத்தான். அந்தத் தலையசைப்பில் ஜீவனில்லை; உணர்ச்சியும் இல்லை. இந்த உலகத்தில் வீட்டுமன் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம், அல்லது இந்த உலகம் வீட்டுமனுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் அநேகமாக முடிந்து விட்டன. சாவின் வருகையையும் அது நேரப் போகின்ற உத்தராயண புண்ணிய காலத்தையும் எதிர்நோக்கி அவனும் அவனுடைய சிற்றுயிரும் காத்திருந்தன. வீட்டுமன் இறப்பை எதிர்நோக்கி நிற்கும் இந்த அந்திம காலச் செய்தியை ‘சஞ்சயன்’ மூலம் தந்தை திருதராட்டிரனுக்குக் கூறி அனுப்பினான் துரியோதனன். தன்