பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

453

சகுனி, சல்லியன், கர்ணன் ஆகியவர்களை வியூகத்தின் முகப்பில் காவலாக நிறுத்தினார்கள். துரோணர் சயத்திரதனை மையமாக அமைத்து வகுத்த அந்த வியூகம் மிக அருமையாக அமைந்திருந்தது. விண்ணவரும் அதைக் கண்டு வியந்தனர். போர் தொடங்கிய போது முதன் முதலாக அர்ச்சுனன்தான் எதிர்த்திடுவதற்கு முன் வந்தான். அர்ச்சுனனுக்கு அருகில் உத்தமோசன், உதாமன் ஆகிய வீரர்கள் புடைசூழ்ந்து இருந்தனர். துரோணரால் மிகுந்த நெருக்கமாகவும் அரிய முறையிலும் அமைக்கப்பட்டிருந்த வியூகத்தின் மேல் அர்ச்சுனன் தன் தாக்குதலை ஆரம்பித்தான். ஓராயிரம் வில்கள் பலமுறை பொழிய வேண்டிய அவ்வளவு அம்புகளையும் அவனுடைய ஒரு வில்லே மாறிமாறிப் பொழிந்தது. ஒவ்வொரு முறையும் அவனுடைய வில்லின் நாணிலிருந்து எழும்பும் போது பகைவர்களுடைய நெஞ்சம் அதிர்ந்தது. கைகள் நடுங்கின. உள்ளங்களில் பயமும் சோர்வும் பிறந்தன. படையின் முன்புறம் நின்ற வீரர்கள் ஒவ்வொருவராகப் பின் நோக்கி ஓடத் தலைப்பட்டனர். ஆயிரக்கணக்கான குதிரை வீரர்களோடு எதிர்ப்பதற்கு முன்வந்த திருதவர்மன் நிலைகுலைந்து ஓடினான். யானைப் படைகளெல்லாம் கூட்டிக் கொண்டு எதிர்க்க வந்த துச்சாதனன் மிரண்டு போய்ப் பின் வாங்கினான். துரோணர் நின்று கொண்டிருந்த இடத்துக்கு முன்னால் இருந்த படைவரிசைகளைச் சிறிது சிறிதாக அழித்து விட்டான் அர்ச்சுனன். மகாவீரரும் வில்லாசிரியருமாகிய துரோணரே அதைக் கண்டு திடுக்கிட்டார். அடுத்து நிகழவேண்டிய போர், அர்ச்சுனனும் துரோணரும் ஒருவரையொருவர் எதிர்த்துச் செய்யவேண்டியதாக வாய்த்தது. துரோணருக்கு அருகில் நேர் எதிரே அர்ச்சுனனுடைய தேரை ஓட்டிக் கொண்டு போய் நிறுத்தினான் கண்ணன். அந்த நிலையில் துரோணருக்கும் அர்ச்சுனனுக்கும் விற்போர் தொடங்கிற்று.

இருவரும் விரைவில் போரை நிறுத்துகிற வழியாகத் தோன்றவில்லை. துரோணருடன் அர்ச்சுனன் நீண்ட