பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

209


“சும்மா மிரட்ட வேண்டாம். நான் பேடியல்ல ஓடிப் போவதற்கு நீ யாரென்று சொல்!”

“சொல்லி விடட்டுமா ! நெஞ்சத்தை உறுதியாக்கிக் கொண்டு கேள். நான்தான் அர்ச்சுனன். இந்த உலகத்தில் வில் என்று ஒரு கருவி பிறந்திருக்கிறதே, அதை ஆள்வதற்கென்றே பிறந்த வில்லாளன்.”

“ஓகோ! அப்படியா? இப்பொழுது இதைக் கேள்விப் பட்ட பிறகுதான் என் கோபம் இரண்டு மடங்காகிறது. நீதான் அந்த அர்ச்சுனனா? அப்படிச் சொல்! எங்கள் குலத்தைச் சேர்ந்த ஏகலைவன் கட்டை விரலை இழக்கக் காரணமாக இருந்த துரோணரின் சீடன் இல்லையா நீ? மதிப்பிற்குரிய துருபத மன்னனைத் தேர்க்காலில் கட்டி இழுத்து வந்து அவமானம் செய்தது, காண்டவத்தில் தீ எரிந்தபோது அங்கு வசித்த பல வேடர்களைத் தீயில் எரிந்து அழிந்து போகுமாறு செய்தது, ஒரு பார்ப்பானுடைய பசுக்களைக் கவர்ந்ததற்காகப் பல வேடர்களைத் துன்புறுத்தியது, ஆகிய தீமைகளை யெல்லாம் கூசாமல் செய்த கொடியவன் நீதானா? நீ பிறந்த நாளிலிருந்து இன்று வரை வேடர் குலத்துக்கு எவ்வளவு தீமைகள் புரிந்திருக்கிறாய்? இன்று சரியாக என்னிடம் மாட்டிக் கொண்டாய்? உன் உயிரை வாங்காமல் விடப் போவதில்லை. ஆண்மையிருந்தால் என்னோடு போருக்கு வா! பார்க்கலாம்” என்று வேடன் ஆத்திரத்தோடு வில்லை வளைத்தான்.

கையில் வில் வளைந்தது. முகத்தில் புருவங்கள் வளைந்தன. அர்ச்சுனனுக்கும் சினம் வந்து விட்டது. அவனுக்கும் போர் செய்து இரண்டிலொன்று பார்த்துவிட விருப்பம் தான். அவனுடைய வில்லும் வளைந்தது. இருவரும் ஒருவர் மேல் ஒருவராக மாற்றி மாற்றி அம்பு மழை பொழிந்தார்கள். தொடக்கத்தில் வேடன் மேல் அர்ச்சுனன் செலுத்திய அம்புகளை எல்லாம் அவன் சாமார்த்தியமாகத் தடுத்து விட்டான். ஆனால் வேடன் தன் மேற்செலுத்திய

அ.கு. -14