பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

547

ஆனால் என்னுடைய நூறு சகோதரர்களில் இப்போது ஒருவன் கூட உயிருடன் இல்லை‘ - என்று ஏங்கினான் துரியோதனன். அவனுடைய அகத்தில் மட்டுமல்ல, முகத்திலும் அந்த ஏக்கம் பிரதிபலித்தது.

பளிங்கின் உள்ளே நிறைந்த பொருள் அந்தப் பளிங்கு வழியாகவே வெளியில் தெரிவது போல் துரியோதனனுடைய நெஞ்சின் ஏக்கம் தருமனுக்கு அவன் முகத்திலிருந்தே நன்கு தெரிந்தது. “துரியோதனா! இந்த உலகத்தில் உண்மையான அன்பும் நேசமும் கொண்டு சகோதரனாக வாழ்வதைப் போல் சிறந்த பாக்கியம் வேறு எதுவும் இல்லை. இப்போது இந்தக் கடைசி விநாடியில் நீ விரும்பினாலும் போரை நிறுத்திச் சமாதானமடைந்து எங்கள் அன்புச் சகோதரனாக உன்னை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். நீ அதற்குச் சம்மதிக்கின்றாயா?” என்று கேட்டான் தருமன். ஆனால் துரியோதனன் அதற்குச் சம்மதிக்கவில்லை. “என் உற்றார் உறவினர், உடன் பிறந்தவர்களையெல்லாம் போரில் கொன்று விட்டீர்கள். என் பரம வைரிகளாகிய உங்களோடு சமாதானம் செய்துகொள்ள எனக்கு விருப்பமில்லை. வெற்றியோ தோல்வியோ, வாழ்வோ மரணமோ, முடிவு எதுவானாலும் அதைப் போர் செய்தே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று பாண்டவர்களிடம் திமிரோடு பேசினான் அவன்.

“சரி! நீயே போருக்கு ஆசைப்படுகிறபோது எங்களுக்கென்ன வந்தது? செய்; போரைச் செய்து உன் தலை விதியை நீயே நிர்ணயித்துக்கொள்” என்றான் தருமன்.

சமந்த பஞ்சகத்திலுள்ள ஒரு பெரிய பூஞ்சோலையில் வீமனுக்கும் துரியோதனனுக்கும் போர் ஆரம்பமாயிற்று. ஒருவர் கதை ஒருவர் மேல் புடைக்க இருவர் மேலும் அடிகள் திடும் திடுமென்று விழுந்தன.

“அடே துரியோதனா? உன் உடலைப் பிளந்து அதிலிருந்து ஒழுகும் இரத்ததைக் குடிக்கவில்லையானால் என்