பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

அறத்தின் குரல்

என்ன?” -என்று கீசகன் கைகளை நீட்டி நெருங்கி அவளை அணைப்பதற்குப் பாய்ந்தான். கையிலிருந்த பூக்குடலையைக் கீழே போட்டுவிட்டுச் சுதேஷ்ணையின் இருப்பிடத்தை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடினாள் விரதசாரிணி. அணைப்பதற்கு நீட்டிய அவனது வலிய கரங்களில் ஒரு பூஞ்செடி சிக்கிக் கசங்கியது. கீசகன் நன்றாக ஏமாந்தான். ஓடிப்போன விரதசாரிணி சுதேஷ்ணையை அடைந்து கீசகனின் கொடுமையைக் கூறி அலறியழுதாள்.

“என்னை நெருங்கினால் உங்கள் தம்பியின் உயிர்தான் அழியும். தேவீ! என்னைக் காப்பாற்றுங்கள். அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற வெறியை வேறு யாராவது கணிகையர்களைக் கொண்டு தீருங்கள்” என்று விரதசாரிணி முறையிட்டபோது சுதேஷ்ணை அவளுக்காக இரங்கி வருத்தப்பட்டாள். தன் தம்பி கீசகன் மேல் அவளுக்கு மிகுந்த சினம் உண்டாயிற்று. அந்தச் சமயத்தில் கீசகன் விரதசாரிணியைத் தேடிக் கொண்டு அங்கே ஓடி வந்தான்.

சுதேஷ்ணை அவனைத் தடுத்து நிறுத்தி “கீசகா! உன்னால் எனக்குக் கெட்ட பெயர்தான் உண்டாகிறது. இங்கிருக்கும் பெண்களிடம் நீ நடந்து கொள்ளும் விதம் சிறிதும் நன்றாக இல்லை. எனக்கு நல்லது செய்ய வேண்டுமானால் நீ இங்கே வரக்கூடாது” -என்று ஆத்திரத்தோடு கூறினாள். கீசகன் தமக்கைக்கு மறுமொழி கூற வாயின்றிப் பேசாமல் குனிந்த தலை நிமிரத் துணிவின்றித் திரும்பிச் சென்றான். கீசகன் தான் அந்தப்புரத்திலிருந்து திரும்பியிருந்தான். அவன் மனம் என்னவோ அந்தப்புரத்தில் விரத சாரியிணியிடத்திலிருந்து திரும்பவே இல்லை. வெறி நிறைந்த எண்ணங்களின் பயனாகத் தான் கண்ட அழகியைத் தன்னிடம் வரவழைப்பதற்கு ஒரு தந்திரமான திட்டம் தயார் செய்தான். காம மிகுதியினால் காய்ச்சல் கண்டு மயங்கி மூர்ச்சையுற்று விழுந்தவனைப் போல நடித்து, “விரதசாரிணியின் அழகு காரணமாக நான் சாகக் கிடக்கிறேன். என் உயிர் இனிமேல் பிழைப்பது அருமை.