பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

544

அறத்தின் குரல்


“அடே! துரியோதனா! உனக்குத் தவம் ஒரு கேடா? வீட்டுமன், துரோணன், கர்ணன் முதலிய மகாவீரர்களை எல்லாம் போரில் பறிகொடுத்துவிட்டு நீ மட்டும் உயிரோடு தவம் செய்வதற்கு வந்துவிட்டாயோ? நீ ஒரு கையாலாகாத மனிதன் வாளேந்திப் போர் செய்யத் தெரியாத நீ தவம் செய்தா எதிரியை மடக்கிவிடப் போகிறாய்? பேடிக்கும் உனக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? ஆண்மையில்லாத பேடிதான் பெண்பிள்ளையைப் போல் ஒடுங்கிக் கிடப்பான். வீரமில்லாத நீ முனிவனைப் போல அடங்கித் தவம் செய்வதாகப் பாசாங்கு செய்கிறாய். ஆனால் நான் உன்னைச் சும்மா விடமாட்டேன். அன்று அரசர்கள் கூடிய பேரவையில் எங்கள் திரெளபதியை நீ அவமானப்படுத்திய போது நான் ஒரு சபதம் செய்தேனே? அது உனக்கு நினைவிருக்கிறதா? அந்தச் சபதத்தை நிறைவேற்றுவதற்குரிய நேரம் இப்பொழுது நெருங்கிவிட்டது. இன்று நீ என்னை ஏமாற்ற முடியாது. உன்னோடு போர் செய்து உன்னைத் தொலைப்பதற்காகவே இப்போது இங்கே வந்து நிற்கிறேன். எழுந்திரு, கரையேறி வா!”

வீமனின் பேச்சு, துரியோதனனுடைய பொறுமையைச் சோதித்து விட்டது இயற்கையாகவே அவனுக்குரிய கீழ்மைக் குணம் அவனைப் பற்றிக் கொண்டது. முன்பு அசுவத்தாமன் முதலியோர் வந்தபோதுங்கூடத் தவத்தைக் கைவிடாமல் இருந்தவன், இப்போது ஆத்திரத்தினால் வீமனை எதிர்ப்பதற்காகத் தவத்தைக் கைவிட்டுக் கரையேறினான். வீமன்மேல் துரியோதனனுக்கு ஏற்பட்டிருந்த கோபம் நிஷ்டையைக் கலைத்தே விட்டது. பாண்டவர்களைச் சினத்தோடு நோக்கினான் அவன்.

“தனியாக ஆயுதமின்றித் தவகோலத்தில் நிற்கும் என்னைப் போருக்கு அழைக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் ஐந்தாறு பேராகத் திரண்டு ஆயுதங்களோடு வந்துள்ளீர்கள். நானோ தன்னந்தனியனாய் நிற்கிறேன். ஆகவே உங்களில் யாராவது ஒருவர் மட்டும்