பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

319

மாளிகைக்குச் சென்றான். ‘வீமனும் அர்ச்சுனனும் போர் செய்ய ஆசை கொண்டிருப்பது வீண் போகாது’ என்று மனதில் நினைத்துக் கொண்டான் அவன். கண்ணனை மாளிகையில் கொண்டு போய் விட்டு விட்டு, விதுரன் மீண்டும் அவைக்கு வந்து சேர்ந்தான். துரியோதனனின் கோபம் முழுவதும் விதுரன் மேல் பாய்ந்தது. விதுரன் தனக்கு தந்தை முறையுள்ளவன் என்பதையும் மறந்து அவையெல்லாம் கேட்கும்படியாக அவனை மரியாதை மீறித் தூற்றலானான்:-

“நீ எப்போதுமே நன்றி கெட்டவன். என் எதிரிகளை ஆதரித்து அவர்களிடமிருந்து வந்திருக்கும் அந்த இடைப்பயலுக்குப் புகலிடம் அளித்திருக்கிறாய். நீ பொருள் கொடுத்தவர்களுக்கெல்லாம் தன் நலத்தை விற்கும் விலைமகளைப் போலக் கேவலமானவன். நீ என்னிடம் உணவு உண்டு எனக்கே துரோகம் செய்கிறாய்.” இதைக் கேட்டு விதுரனின் பொறுமை எல்லை மீறி விட்டது. அவன் ஆத்திரத்தோடு வில்லும் கையுமாக எழுந்தான்.

“அவையோர்களே! இப்போது இவன் மேல் எனக்கிருக்கும் ஆத்திரத்தில் இவன் கழுத்தை நெறித்துக் கொன்று விடுவேன். ஆனால் ‘மகனைக் கொன்ற தந்தை’ என்று பழி ஏற்படுமே என அஞ்சுகிறேன். என் நன்றியையும் நற்பண்புகளையும் பற்றி முட்டாளாகிய உனக்குத் தெரியாவிட்டாலும் இங்குள்ள பெரியோர்களுக்கு நன்றாகத் தெரியும். இதோ இப்போது செய்கின்ற சப்தத்தைக் கேட்டுக் கொள்! நாளை ஏற்படப் போகிற போரில் நிச்சயமாக உன் பொருட்டு வில் எடுத்து உதவமாட்டேன். இது சத்தியம்” -இவ்வாறு கூறிக் கொண்டே தன் கையிலிருந்த வில்லை இரண்டாக முறித்துத் துரியோதனன் முன் எறிந்து விட்டுத் திரும்பிப் பாராமல் அங்கிருந்து வெளியேறித் தன் மாளிகைக்குச் சென்றான் விதுரன். அவ்வளவுதான் எரிமலை குமுறி ஓய்ந்து விட்டது!