பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

546

அறத்தின் குரல்

விரிவாகக் கூறினார்கள். போர்க்களத்தில் பதினேழு நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிப் பாண்டவர்கள் விதுரனுக்கும் பலராமனுக்கும் கூறினார்கள். பரஸ்பரம் பேச்சு குசலப் பிரச்னம், எல்லாம் முடிந்தபின், இப்போது இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள்!” என்று பாண்டவர்களைக் கேட்டான் விதுரன்.

“செய்வதென்ன? பாண்டவர், கெளரவர் ஆகிய இருசாராருக்கும் வசதியாக ஒரு முடிவு செய்திருக்கிறோம். பாண்டவர்கள் சார்பாக வீமனும், கௌரவர்கள் சார்பாகத் துரியோதனனும் கதாயுதங்களால் போர் செய்வது. போரில் யாருக்கு வெற்றியோ அவர்கள் அரசாள வேண்டியது என்று தீர்மானித்திருக்கிறோம். தீர்மானப்படி போரை எந்த இடத்தில் நடத்துவதென்பது தான் யோசனையிலிருக்கிறது.” விதுரனை நோக்கி இப்படிக் கூறிவிட்டுப் பலராமன் பக்கமாகத் திரும்பி, “இவர்கள் போரை எந்த இடத்தில் நடத்தலாம் என்பதை நீதான் சொல்லேன் அண்ணா! நீ சொன்னால் இவர்கள் இருவருமே அதை ஒப்புக் கொள்வார்கள்!” - என்று பலராமனைக் கேட்டான் கண்ணன்.

“இல்லை இல்லை நான் சொல்வது பொருத்தமில்லை நீயே ஓர் இடத்தை இருவருக்கும் பொதுவாக நிர்ணயித்துக் கூறிவிடு” என்றான் பலராமன். “சரி! அப்படியானால் சமந்த பஞ்சகம், என்னும் இடம் இங்கிருந்து சமீபத்தில் தான் இருக்கிறது. அந்த இடம் நீங்கள் போர் புரிவதற்குப் பொருத்தமானது” - என்று கண்ணன் கூறினான். உடனே விதுரன், பலராமன் உட்பட யாவரும் அருகிலிருந்த சமந்த பஞ்சகம் என்னும் மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

வீமனுக்கும் துரியோதனனுக்கும் போர் நிகழ்வதற்குரிய ஏற்பாடுகள் அங்கே நடந்தன. தனி ஆளாக இருந்த துரியோதனனுக்கு மனத்தில் குழப்பமும், கலக்கமும், ஏக்கமும், நிறைந்திருந்தன. ‘தருமனுக்கு நான்கு தம்பிமார்கள். எனக்கு நூறு தம்பிமார்கள் . தருமனுடைய நான்கு சகோதரர்களும் இதோ அவன் அருகிலேயே நிற்கின்றனர்.