பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

அறத்தின் குரல்

மனிதனைக் கொன்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு புறப்பட்டான் அவன். மணிமானும் அவன் ஆணைக்குக் கீழ்ப்பட்ட எண்ணாயிரம் படைத் தலைவர்களுமாக வீமனை எதிர்த்துப் புறப்பட்டார்கள்.

அந்தப் படைத்தலைவர்களுள் துடுக்குத்தனம் நிறைந்தவனும் முரடனுமாகிய சலேந்திரன் என்பவன் வீமனைப் பார்த்து, “அடே நீ உயிரோடு இங்கிருந்து பிழைத்துப் போக முடியாது. இறந்து போகப் போவது உறுதி. இறந்து போவதற்கு முன்பாவது நீ யார் என்பதைக் கூறி விடு” என்று அகம்பாவத்தோடு கேட்டான். வீமன் அவனை ஏறிட்டுப் பார்த்தான். “ஓகோ! நான் யார் என்பது உங்களுக்கும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டதா? முன்பு ஒரு முறை நான் இங்கு வந்து வீரர்கள் பலரை ஒருவனாக நின்று வென்று எனக்கு வேண்டிய மலரைப் பெற்றுச் சென்றேனே. மறந்து விட்டதானால் இந்தச் சோலையைக் காவல் காக்கும் வீரர்களைக் கேட்டுத் தெரிந்துக் கொள்” என்று வீமன் அவனுக்கு மறுமொழி கூறினான்.

வீமனுக்கும் படைத்தலைவர்களுக்கும் போர் தொடங்கியது. முன்னணியின் நின்ற சாதாரணமான படைத்தலைவர்கள் ஒவ்வொருவராக ஆற்றலிழந்து தளரவே, செய்தியறிந்து மணிமான் வீமனுடன் நேருக்கு நேர் போருக்காக வந்து நின்றான். கண் கட்டி வித்தை செய்வது போல் மாயையான பல ஏமாற்றுப் போர் முறைகளை நன்கு அறிந்தவனாகிய மணிமான் தன் சாமர்த்தியத்தை எல்லாம் வீமனுக்கு முன் காட்டினான். ஆனால் மணிமானின் அந்த அதியற்புத சாமர்த்தியங்களைக் கூட வீமன் விட்டு வைக்கவில்லை. வில்லும் அம்புமாகிய ஓரே கருவியைக் கொண்டு மணிமானின் உடம்பைச் சல்லடையாகத் துளைத்தான். கடைசியாக ஓர் அம்பு மணிமானின் உயிரையும் வாங்கி விட்டு அவனது வெற்றுடலைக் குருதி வெள்ளத்திற்கிடையே தள்ளியது. வீமன் முன் போலவே வெற்றி முழக்கம் செய்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் முன்பொரு சமயம் செய்தது