பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

அறத்தின் குரல்

ஓடுவதற்கு முயன்றான். பகதத்தனுடைய யானை ஓடும்போது இடையிலே பாண்டவ சைனியம் அகப்பட்டுக் கொண்டதனால் மோதியும் நசுக்கியும் வீரர்களை அழித்தது அது. பகதத்தனுடைய யானையினால் தனது சேனை சிதறி அழிவதைத் தேர்மேல் நின்று கொண்டிருந்த தருமன் பார்த்து விட்டான்.

“தீமை எதுவாயிருந்தாலும் அதை உடனே அழித்து விடுவது தான் நல்லது! தீமைகளிலெல்லாம் தலை சிறந்த தீமை இந்தப் பகதத்தன் உருவில்தான் நடமாடுகிறது. இவனை முதலில் அழித்தொழிக்க வேண்டும்.” தருமன், இவ்வாறு தீர்மானித்துக் கொண்டு கண்ணனை மனத்தில் தியானித்தான். திரிகர்த்தனோடு போர் செய்யும் அர்ச்சுனனுக்குத் தேரோட்டிக் கொண்டிருந்த கண்ணன், தருமன் தன்னை நினைப்பதை உணர்ந்து கொண்டான். உடனே அர்ச்சுனனிடம் சொல்லித் தேரை தருமன் நின்று கொண்டிருந்த இடத்திற்குத் திருப்பினான். கண்ணன் தேரை திருப்பிக் கொண்டு வந்த இதே சமயத்தில் பகதத்தன் ஏறிக் கொண்டிருந்த யானையும் திரும்பியது. தேரும், யானையும் மிக அருகிலே நேர் எதிரெதிரே சந்தித்தன. அவ்வளவுதான்! யானை மேலிருந்தபடியே பகதத்தன் அர்ச்சுனன் மேல் அம்புகளைச் செலுத்தினான். அர்ச்சுனன் தேர் மேலிருந்த படியே பகதத்தன் மேல் அம்புகளைச் செலுத்தினான். இருவருக்கும் திடீரென்று போர் தொடங்கி விட்டது. பகதத்தன் செலுத்திய அம்புகளைத் தன் அம்புகளால் தடுத்து முறித்தான் அர்ச்சுனன். தேரை ஓட்டுகிற கண்ணன் மேலேயே அம்புகளைச் செலுத்த முயன்றான் பகதத்தன். ஆனால் அவன் முயற்சி பலிக்கவில்லை. அர்ச்சுனனின் அம்புகளால் அவன் மார்புக் கவசம் கிழிந்தது. யானையின் முகபடாம் உடைந்து தூள் தூளாயிற்று. வில்லும், அம்பறாத் தூணியும் உடைந்து கீழே விழுந்தன. சினங்கொண்ட பகதத்தன் தன்னிடம் எஞ்சியிருந்த ஒரே ஒரு வேலை எடுத்துக் குறி பார்த்து அர்ச்சுனன் மேல் வீசினான். ஆனால் அது அர்ச்சுனனை