பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

ஏமாற்றமே அவர்களுடைய பொறாமைக்குக் காரணம். அப்பொறாமைக்காரர்களால் கூடத் தாஜ்மகாலைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவ்வாறு பாராட்டப் புகுந்த ஒரு வெள்ளையர், “பண்டைய கிரேக்க நாட்டுச் சிற்பங்களுக்குத் தாஜ்மகால் ஈடாகாது என்றாலும், இது உலக விந்தைகளுள் ஒன்று என்பதில் ஐயமில்லை!” என்று தம்மை மறந்து கூறுகிறார். தாஜ்மகாலை நேரில் கண்ட அமெரிக்க அறிஞர் ஒருவர் கற்பனை நயத்தோடு பாராட்டுகிறார். “தாஜ்மகால் வானத்தில் தவழும் ஒரு புகை ஓவியம் போலவும், நிலவைப் போலவும் காட்சியளிக்கிறது. அதன் உச்சியில் காணப்படும் வளைவுக் கோபுரங்கள் வெள்ளிக் கொப்புளங்களைப் போல் காணப்படுகின்றன” என்று கூறுகிறார்.

ஹாவல் என்ற மற்றோர் ஐரோப்பியர், “தாஜ் மகால் காண்பவரின் உள்ளத்தில் உணர்ச்சி வெள்ளத்தைக் கொட்டுகிறது; இதற்கு முன் ஒருவன் எண்ணிப்பார்க்காத உயர்ந்த கற்பனைகளையும் சிந்தனைகளையும் தூண்டி விடுகிறது. கலைக்குக் கருவூலமாக விளங்கும் இவ்வொப்பற்ற மாளிகை, இந்திய நாட்டுப் பெண்ணினத்தின் பெருமைக்கும், அழகுக்கும் படைக்கப்பட்ட காணிக்கையாகும். இவ்வுயரிய கலைக்கோவில் எழுவதற்குக் காரணமாக விளங்கிய பெண்மையை நான் நாவார வாழ்த்துகிறேன்!” என்று கூறுகிறார். தாஜ்மகாலின் சிறப்பைப்பற்றி இன்னும் எவ்வளவோ அரிய கருத்துக்களை யெல்லாம் மேலை நாட்டறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.