பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3


தமிழ் அறிஞர்கள் கலைகளை அறுபத்து நான்கு வகைகளாகப் பிரித்தனர். அவற்றுள் ஒவியக்கலை, இசைக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றை நுண்கலைகள் என்றனர். சிற்பக்கலைக்குத் தாயாக விளங்கும் கட்டடக் கலையும் நுண்கலையே. நாகரிகமறியாக் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்கள், பசி வந்தபோது காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்டனர்; நீர் வேட்கை கொண்டபோது காட்டில் ஓடி வரும் ஆற்றுநீரை அருந்திக் களை தீர்ந்தனர்; மழைக்கும், வெயிலுக்கும், பனிக்கும் அஞ்சி மலை முழைஞ்சுகளிலும், மரத்தின் கிளைகளிலும் வாழ்ந்தனர், எலி வளைகளையும் பறவையின் கூடுகளையும் கண்ட நாகரிகமற்ற அம்மக்கள், அவ்வுயிர் இனங்களைப் போலத் தாமும் நிலைத்த பாதுகாப்பான தங்குமிடங்களை அமைத்துக் கொண்டு வாழ விரும்பினர். இவ்வாறு அவர்கள் உள்ளத்தில் தோன்றிய எண்ணம்தான் கட்டட நாகரிகத்தின் முதற்படி என்று கூறவேண்டும்.

அவர்கள் சிறிது நாகரிகம் பெறத் தொடங்கியதும் மண்ணாற் சுவர் எழுப்பி, அதன் மேல் இலை தழைகளைப் பரப்பிக் கூரைவேய்ந்து அதிலே குடியிருக்கத் தொடங்கினர். பிறகு மனித இனத்தின் நாகரிக வளர்ச்சிக் கேற்பக் கட்டடக் கலையும் வளர்ச்சி பெற்றது. மண்ணால் சுவர் எழுப்பிய மக்கள், பச்சைச் செங்கற்களையும், பிறகு சூளையில் வைத்துச் சுட்டெடுத்த செங்கற்களையும் பயன்படுத்தி வீடு கட்டத் தொடங்கினர். சங்க காலத்திலேயே தமிழ் மக்கள் அழகிய மாளிகைகளை