பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

கோளுக்கு இசைந்து, அவர் தஞ்சைக்கு எழுந்தருளினர். தம்முடைய வாயிலிருந்த தம்பலத்தை மருந்தாகப் பயன்படுத்தி இலிங்கத்தைக் கருவறையில் பொருத்தினர் தேவர். வியக்கத்தக்க முறையில் உருக்கி வார்த்தாற் போல் அது பொருந்தியது.

தஞ்சைப் பெரிய கோவில் இந்திய நாட்டிலேயே தலைசிறந்த கோவில் என்று பிரித்தானியக் கலைக்களஞ்சிய நூல் (Encyclopaedia Brittanica) கூறுகிறது. இக்கோவில் தஞ்சையின் நடுவிலுள்ள சிவகங்கைச் சிறு கோட்டையின் தென் பாதியில் அமைந்துள்ளது. கோட்டையைச் சுற்றி ஆழமான அகழி ஒன்று அமைந்துள்ளது. கோவிலுக்குள் செல்பவர்கள் அகழி மேலுள்ள பாலத்தைக்கடந்து கோட்டைச் சுவரிலுள்ள வளைவுக்குள் நுழைந்து உள்ளே செல்ல வேண்டும். அகழியைக் கடந்ததும் அழகிய கோபுரம் ஒன்று தென்படும். அதைக் கடந்து உள்ளே சென்றால் அகன்ற கோபுரம் தென்படும். பிறகு ஏறத்தாழ 152 மீட்டர் நீளமும் 764 மீட்டர் அகலமும் உடைய பெருமன்றம் உள்ளது. அதன் எதிரில் அமைந்துள்ள பீடத்தின் மேல் மிகப் பெரிய நந்தி படுத்திருக்கிறது. தமிழகத்திலுள்ள வேறு எந்தக் கோவிலிலும் இவ்வளவு பெரிய நந்தியைக் காண முடியாது. இதன் கலையழகு கண்ணைக் கவரும் தன்மையது. உயிருள்ள காரெருது ஒன்று இளைப்பாறுவதற்காகப் படுத்திருப்பது போல் இது தென்படும். நாக்கை வெளியில் நீட்டி வளைத்து, மூக்கிற்குள் செலுத்தியிருக்கும் சிற்ப நயத்தை வியவாதார் எவரும் இருக்க முடி-