பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

அறத்தின் குரல்

நடுநாயகமாகவும் மற்றவர்கள் சூழவும் சென்ற நிலை, நட்சத்திரங்களுக்கிடையே சந்திரன் பவனி வருவது போலத் தோன்றியது. திரெளபதியும் அந்தப்புரத்தைச் சேர்ந்த மற்ற பெண்களும் அழகிய சின்னஞ்சிறு பல்லக்குகளில் பிரயாணம் செய்தனர். நிமித்திகர், கணிகர் முதலிய அரண்மனைப் பணியாளரும் வழக்கப்படி உடன் சென்றனர். இந்திரப் பிரத்த நகரிலிருந்து சில நாழிகைகள் பயணஞ் செய்து ஒரு காட்டுப் பகுதியை அடைந்தபோது, அங்கே சில தீய நிமித்தங்கள் ஏற்பட்டன. பல்லிகள் தீமைக்கறிகுறியான குரல் கொடுத்ததையும், செம்போத்து என்னும் பறவைகள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கத்துக்குச் சென்றதையும் செல்லும் வழியை மறித்துக் கொண்டு ஆண் மான்கள் கொம்புகளை ஆட்டிச் சண்டை செய்ததையும் கண்டு நிமித்திகர்கள் மனம் வருந்தினர். இந்த நிமித்தங்களால் ஏற்படக் கூடிய தீய பலன்களை உடனே தருமனிடம் கூறவும் கூறினர். அப்படிக் கூறியபோது தருமன் அவர்களுக்குக் கூறிய பதில் அவர்களையே திகைக்கச் செய்தது.

“நிமித்திகர்களே! தீமை நிகழப் போகிறது என்பதை உங்கள் சகுன பலன்களால் மட்டுந்தானா தெரிந்துகொள்ள முடியும்? அதற்கு முன்பே என் மனத்திற்குத் தெரிகிறதே! உங்கள் நிமித்தம், நிமித்த பலன் இவைகளைக் காட்டிலும் விதி சக்தி வாய்ந்தது. அந்த விதி வகுத்த வழியின் மேலே தான் இப்போது நான் என் தம்பியர்கள்; ஏன்! நாம் எல்லோருமே சென்று கொண்டிருக்கிறோம். அதை மீற எவராலும் முடியாது. அதன்படியே எல்லா நிகழ்ச்சிகளும் நிகழும்”. இந்த பதில் மொழிகளைக் கேட்டபின் நிமித்திகரும் ஏனையோர்களும் பேசாமல் இருந்தனர்.

நீண்ட நேரப் பிரயாணத்திற்குப் பின்பு வழியருகில் தென்பட்ட ஓர் குளிர்ந்த சோலையில் அவர்கள் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். சோலைக்கு நடுவே ஒரு பொய்கை இருந்தது. மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்துடன் யாவரும் அதில் நீராடினர். பல வகை மலர்களைக் கொய்து மகளிர்கள் தத்தம்