பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83


ஆட்சியை மொகலாயர்களின் பொற்காலம் என்று சொல்லுவர். அவன் காலத்தில் அரண்மனைக் கருவூலத்தில் பொன்னும் மணியும் மலைபோலக் குவிந்து கிடந்தன. டில்லிப் பெரு நகரம் அவன் கைவண்ணத்துக்காகக் காத்துக்கிடந்தது. இந்நகருக்குள் காலடி எடுத்து வைப்பவர் ஒவ்வொருவரும் காண விரும்புவது செங்கோட்டையைத்தான். இக்கோட்டையை எழுப்பிய பெரு மன்னன் ஷாஜகானே.

இக்காலத்தில் இதைச் செங்கோட்டை என்று வழங்குகின்றனர். ஷாஜகான் காலத்தில் இது உருது-இ-முஅல்லா என்ற பெயரால் வழங்கப்பட்டது. ஷாஜகானுக்குப் பிறகு ஆண்ட மொகலாய மன்னர்கள் 'பெருமைக்குரிய பெருங் கோட்டை' என்ற பெயரால் இதை அழைத்தனர்.

இந்தியாவில் பல இடங்களில் உள்ள மன்னர்களுடைய அரண்மனைகளைவிடச் செங்கோட்டை பேரழகோடு விளங்குகிறது. குறிப்பாகச் சொல்லப் போனால், இந்திய நாட்டிலேயே செங்கோட்டைக்கு ஒப்பான பெருமாளிகையை எங்கும் காண முடியாது. இது கோட்டைக்குக் கோட்டையாகவும், அரண்மனைக்கு அரண்மனையாகவும் விளங்கியது. திவானீ ஆம், திவானீ காஸ், ஜெனானா, ரங்மகல் முதலிய மாளிகைகள். செங்கோட்டையில் அடங்கிய பகுதிகளாகும். அயத்பக்சு, மேதாப் பாக் என்பன இம்மாளிகைகளைச் சூழ்ந்திருக்கும் அழகிய பூங்காக்களாகும்.

கோட்டையின் மதிற்சுவரைக் கடந்து உள்ளே நுழைந்ததும் அரண்மனை வாயில் தென்படும்.