பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


யார் சந்நிதி தரை மட்டத்திற்குமேல் உயர்ந்த மேடையில் நிறுவப்பட்டிருப்பதால், மாடக்கோவில் என்று இது பெயர் பெற்றது போலும். படிகளில் ஏறி, உள்ளே செல்ல வேண்டும். துவாரபாலகர்களின் உருவம் மிகவும் கம்பீரமானவை; ஏறத்தாழ 5½ மீட்டர் உயரமும், 2½ மீட்டர் சுற்றளவும் உடையவை.

தென் வாயிலின் கிழக்குப்பகுதியில் திருமகளின் உருவமும், வடக்கு வாயிலின் கிழக்குப் பகுதியில் கலைமகளின் உருவமும் அழகுடன் அமைந்துள்ளன. முன்னால் உள்ள திருவணுக்கன் திருவாயிலுக்கு இருபக்கமும் அமைந்த படி வழியாகவே செல்ல வேண்டும். இராசராசன் கட்டிய காலத்தில் இப்படிகளே இருந்தன. இதற்கு எதிரில் இப்போது தென்படும் படிகள் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனான சரபோஜியினால் கட்டப்பட்டவை.

இராசராசன் சிறந்த சிவபக்தன் என்றும், அவன் சைவ சமயத்தின்பால் கொண்டிருந்த பற்று அளவற்றது என்றும் நாம் முன்பே அறிந்தோம். ஆனால் சமய வெறி அவனுக்கு இல்லை. பிற சமயங்களையும் போற்றும் பண்பு அவனிடம் உண்டு. எனவே கோவில் விமானத்துத் தென் பக்கத்து மதிற் சுவரில் திருமாலின் உருவத்தைப் பொறித்து வைத்தான். அவ்வுருவத்தைச் சுற்றிச் சோழ வீரர், பிள்ளையார், பிச்சாடனர், சூல தேவர், தக்கணாமூர்த்தி, மார்க்கண்டேயர், ஆடல்வல்லான் ஆகியோரின் உருவங்கள் அமைந்துள்ளன.