பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. பிரமிடு

உலகில் மிகவும் பழமையான நாகரிகம் என்று குறிப்பிடத்தக்கவை சிலவே. சங்கம் வைத்து மொழி வளர்த்த தமிழர் நாகரிகம் மிகத் தொன்மையானது என்று நாம் பெருமைப்படுகிறோம். பண்டைத் தமிழ்ப் பெருமக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து சென்று கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து, அரேபியா முதலிய நாடுகளுடன் வாணிகம் செய்தனர் என்பதைச் சங்க இலக்கியங்களின் மூலமாகவும், கிரேக்க, உரோம ஆசிரியர்களின் பிரயாணக் குறிப்புகள் மூலமாகவும் அறியலாம். பழம் பெரும் கடற்றுறைமுகப்பட்டினமான பூம்புகாரில் வெளிநாட்டு வணிகர்கள் கடற்கரையின் ஓரத்தில் கண் கவர் மாளிகைகளை எழுப்பி அவற்றில் வாழ்ந்தனர்.

ஐரோப்பாக் கண்டத்து மக்கள் நாகரிக நுட்பம் தெரியாது வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் மூவேந்தர்களின் பண்பட்ட ஆட்சி நிலவியது. இயல், இசை, நாடகம் சிறப்புற்று விளங்கின. கட்டடக்கலையும் பிற கலைகளும் போற்றற்குரிய வளர்ச்சியைப் பெற்றிருந்தன.

இத்தகைய பழம்பெரும் நாகரிகமான தமிழர் நாகரிகத்திற் கிணையான மிகத்தொன்மையான நாகரிகம் ஒன்று உண்டு. அதுதான் எகிப்திய நாகரிகம். அந்நாகரிகம் சாக்ரட்டீசு, பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்கள் அரும்பாடு பட்டு வளர்த்த கிரேக்க நாகரிகத்திற்கும் முற்பட்டது. சீசர் போன்ற பெருவீரர்கள் கடல்கடந்து பரப்பிய