பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

439

அர்ச்சுனனும் கண்ணனும் வேதியரை வணங்கி விட்டு மேலே சென்றார்கள். வேதியர் மறைந்தார். தேர் பாசறையை நெருங்கியது. முன் ஜாக்கிரதையாக அர்ச்சுனனின் கைகளில் எந்தவிதமாக ஆயுதங்களும் இல்லாமல் கண்ணன் வாங்கி வைத்துக் கொண்டான். பாசறையிலிருந்து ஒரே அழுகைக் குரல்களாகக் காற்றில் கலந்து வந்தன. அழுகைக் குரல் செவியில் கேட்டதும் ஒன்றும் புரியாமல் மிரண்டு போய் கண்ணனைப் பார்த்தான் அர்ச்சுனன். கண்ணன் பதில் சொல்லவில்லை. ஆனால் அவனுடைய கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அர்ச்சுனன் திகைத்தான்.

“கண்ணா! இதென்ன நம்மவர்கள் தங்கியிருக்கும் எல்லாப் பாசறைகளிலிருந்தும் அழுகைக் குரலே கேட்கிறது? நீயும் அழுகிறாய். எனக்கும் மனத்தில் இனம் புரியாத பயமும் நடுக்கமும் தோன்றுகின்றன. இடது கண், இடது தோள், இடது மார்பு எல்லாம் துடிக்கின்றன. இதன் பயன் என்ன? என்ன துயரம் நம்மை எதிர் நோக்கியிருக்கிறதோ? எல்லாம் உணரவல்ல உனக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்திருக்க முடியாதே?” -என்று கண்ணனைப் பார்த்துக் கவலை நிறைந்த குரலில் அர்ச்சுனன் கேட்டான். கண்ணன் இதற்கும் பதில் சொல்லவில்லை. அமைதியாகக் கண்ணீர் சிந்தியபடியே இருந்தான்.

“கண்ணா ! இனியும் பொறுக்க முடியாது! இன்றைய போரில் நம்மைச் சேர்ந்த நமக்கு நெருங்கிய யாரோ ஒருவர் பெருந்துன்பம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. என் சகோதரர்களில் யாருக்கேனும், என் புதல்வர்களில் யாருக்கேனும் துன்பமா? யாருக்குத் துன்பம் ? உள்ளதைச் சொல்லி விடு! இனிமேலும் என்னை ஏமாற்றாதே!” -அர்ச்சுனன் கதறி விட்டான். கண்ணன் அர்ச்சுனனை மார்புறத் தழுவிக் கொண்டான்.

“அர்ச்சுனா! மனத்தைத் திடப்படுத்திக் கொள். நீ விரைவில் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிறவன். நான் சொல்லப்போவதோ பரிதாபகரமான செய்தி."