பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

அறத்தின் குரல்

வைத்தது. அவள் நாணித் தலைகுனிந்தாள். அதன் பின் நீராடும் போது அவனும் சரி, அவளும் சரி, கங்கை நீரில் மட்டும் திளைத்து ஆடவில்லை. ஒருவர் மனத்தில் மற்றொருவராக மாறி மாறித் திளைத்தாடினார்கள். கங்கையின் நீரோட்டத்தில் இடையிடையே தென்படும் கயல் மீன்களைப் போன்ற அவள் விழிகள் அவனையே கடைக்கணித்தன. அவன் கண்களோ, அவள் தோற்றத்தை நோக்குவதிலிருந்து இமைக்கவே இல்லை. கண்களின் இந்த ஒத்துழைப்பு, காதலின் பாஷையோ என்னவோ?

அந்தப் பெண்களின் உரையாடலிலிருந்து அவர்கள் நாகலோகத்தைச் சேர்ந்த கன்னிகைகள் என்றும் அவள் நாகலோகத்து இளவரசி ‘உலூபி’ என்றும் அர்ச்சுனன் பராபரியாகத் தெரிந்து கொண்டான். நீராடி முடித்த பின் அவர்கள் மீண்டும் குகை வழியாக நாகலோகத்துக்குக் கிளம்பினார்கள். அப்போது ‘உலூபி’ மட்டும் அவனைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள். ‘நீங்கள் என்னை இப்படித் தனியே செல்லவிட்டு வாளா இருக்கலாமோ? என்னைப் பின்பற்றி என்னோடு வந்தால் என்ன?’ -என்று அவனை அழைப்பது போல இருந்தது உருக்கம் நிறைந்த அந்தப் பார்வை. திடீரென்று அவன் மனத்திலும் மின்னலைப் போல் அதிவேகமாக ஓர் எண்ணம் தோன்றியது: ‘நாம் இந்த அழகியைப் பின்பற்றி இவளோடு சென்றால் என்ன?’ -இந்த எண்ணம் தோன்றிய மறுகணமே காவி ஆடைகளைப் பிழிந்து அரையில் கட்டிக் கொண்டு துறையிலிருந்து கரையேறிக் குகைக்குள்ளே நுழைந்து பதுங்கிப் பதுங்கி நடந்தான். உலூபியோடு நாகலோகத்தை அடைந்த அர்ச்சுனன் நாகலோகத்து அரசனால் அன்போடு வரவேற்கப்பட்டான். தன் மகளுக்கும் அவனுக்கும் கங்கைக்கரையில் ஏற்பட்ட சந்திப்பையும் காதலையும் தோழிகள் மூலம் அறிந்து இருவரையும் மணமக்களாக்கித் திருமணம் செய்து வைத்தான்.

அர்ச்சுனனும் உலூபியும் மணமான பின் பல நாள் இன்பவாழ்வில் திளைத்தனர். காதலர்களின் மனமொத்த