பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

289

அநாவசியம்” என்றார் வீட்டுமர். தன் அறியாமைக்கு வெட்கமுற்ற துரியோதனன் மறுபேச்சுப் பேசாமல் படைகளையும் பிறரையும் திரும்ப அழைத்துக் கொண்டு போனான். பாண்டவர்கள் நிபந்தனைகளை எல்லாம் கடந்து மீண்டும் வெளி வந்துவிட்டார்களே’ என்ற வயிற்றெரிச்சல் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. இங்கே வெற்றி வாகை சூடிய அர்ச்சுனனும் உத்தரகுமாரனும், களத்திலிருந்து விராட் நகரத்தை நோக்கிப் புறப்பட்டனர். அதற்குள் தென்பகுதியில் போருக்காகப் போயிருந்த விராட மன்னரும் கங்கர், பலாயனன் முதலியோரும் போரை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பி வந்திருந்தனர். வட திசையிலிருந்து வரும் வழியில் ஓர் பூஞ்சோலையில் சிறிது நேரம் உத்தரகுமாரனும் அர்ச்சுனனும் தங்கினர். வெற்றிப் பெருமையை எல்லாம் உத்தரகுமாரன் தலையில் சுமத்தி விட்டுத் தான் முன்போலவே பேடிப் பேரில் ஒளிந்து கொண்டு தேரோட்டிச் செல்லலாம் என்று தோன்றியது அர்ச்சுனனுக்கு. அப்படியே செய்யக் கருதி, “பேடியைத் தேரோட்டுபவளாக அமர்த்திக் கொண்டு சென்ற உத்தரகுமாரன் வடதிசையில் துரியோதனாதியர்களை வென்று வாகை சூடி வருகிறான்” என்று தூதுவன் மூலம் அரண்மனைக்கு முன் தகவல் சொல்லியனுப்பினான். ஏற்கனவே தென் திசையிலிருந்து அரண்மனைக்கு வந்திருந்த விராடன், ‘உத்தரன்’ போருக்குப் போயிருக்கிறான் என்பதைத் தன் மனைவி சுதேஷ்ணையிடம் கேள்விப்பட்டு, இருந்த நம்பிக்கையையும் இழந்து போயிருந்தான்.

“உத்தரன் வீரத்தை நான் அறிய மாட்டேனா? அவன் போர் செய்து உருப்பட்டாற் போலத்தான்! போதாக்குறைக்கு ஒரு பேடியை வேறு தேரோட்டக் கூட்டிக் கொண்டு போயிருக்கின்றானாம்” என்று தனக்குள் அலுத்துக் கொண்டான் அவன். அருகிலிருந்து அதைக் கேட்ட கங்கர், “அரசே! நீ வருந்த வேண்டாம். உத்தரனுக்குத் தேரோட்டிக் கொண்டு சென்றிருக்கும் பேடி சாதாரணமானவளல்லள்.

அ.கு. -19