பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

395

போர் செய்தது போதாதென்று வீமன் தன் கதாயுதத்தை ஓங்கிக்கொண்டு எதிரிகளின் படை வகுப்புக்குள் புகுந்து சாடுவதற்குத் தொடங்கியிருந்தான். வீமனால் கெளரவர் படைக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது. படையும் மிரண்டு ஓடத் தொடங்கியது. மனக் கொதிப்படைந்த துரியோதனன் வில்வித்தையில் கைதேர்ந்த ஓராயிரம் வீரர்களை அர்ச்சுனனுக்கு எதிராக அனுப்பினான். ஓராயிரம் வீரர்களுமாகச் சேர்ந்து கொண்டு அர்ச்சுனனைத் தாக்கிய போது வாயு அஸ்திரத்தைப் பிரயோகித்து அவற்றைத் தடை செய்தான் அவன். வீட்டுமன் போர் செய்து கொண்டுதான் இருந்தான். ஆனால் ஓங்கி நின்றது என்னவோ, அர்ச்சுனன், வீமன் முதலிய பாண்டவர்களின் கைகளே! துச்சாதனன், சகுனி, முதலியவர்கள் தோற்று ஓடினர். தருமத்தின் வெற்றி பாண்டவர்கள் உருவில் விளங்கப் போவதை எண்ணி வீட்டுமன் மனம் களித்தான். ஆனால் தனக்குச் சோறளித்த கெளரவருக்காகச் செய்ய வேண்டிய கடமையையும் மனமாரச் செய்து கொண்டு தான் இப்படி எண்ணினான்.

5. வீட்டுமன் வீழ்ச்சி

பத்தாவது நாள் போர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. விதிகளின் விதியாய், செயல்களின் ஆதி காரணமாய் விளங்கும் கண்ணன் கலவரம் மிகுந்த அந்தப் போர்களத்தின் நடுவே சிந்தித்துப் பார்த்தான். அவன் சிந்தனை வீட்டுமனின் வாழ்க்கையை முடிப்பது பற்றிச் சென்றது. ‘பத்தாவது நாளாகிய அன்றைய போர் முடியும்போது வீட்டுமனுடைய உலக வாழ்வும் முடிந்து விட வேண்டும்’ என்ற தீர்மானத்தோடு அர்ச்சுனனை அணுகினான் கண்ணன். கண்ணனின் குரல் அர்ச்சுனன் காதருகே மெல்ல ஒலித்தது.

“அர்ச்சுனா! இப்போது நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள். எதிர்த் தரப்பில் தளபதியாகவும் பெரிய வீரனாகவும் இருப்பவன் வீட்டுமன். இன்றைக்குப் போர்