பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

433

வகையிலும் வலிமையில்லாத அந்த அரச குமாரர்கள் சிறிது நேரத்திலேயே தளர்ந்து புறமுதுகிட்டு ஓடி வந்து விட்டனர். துரியோதனனுக்கு மகனாகவும் இளவரசர்களுக்கு தலைவனாகவும் இருந்த இலக்கண குமாரன் அபிமன்னனுடைய அம்பு பட்டுக் களத்திலேயே இறந்து வீழ்ந்தான். மகனை இழந்த துயரமும் மானக்கேடுமாகப் பெரிதும் வாட்டமடைந்த துரியோதனன் தன் கட்சியைச் சேர்ந்த அரசர்கள் எல்லோரையும் ஒன்று கூட்டித் தன் இதய வேதனையை அவர்களுக்குத் திறந்து காட்டினான்.

“என்னை அன்போடு ஆதரித்து உதவ முன் வந்திருக்கும் பேரரசர்களே!நீங்களெல்லோரும் அருகில் இருக்கும் போது எனக்கு இத்தகைய மானக்கேடு நேரலாமா? வயதில் மிக இளைஞனாகிய இந்த அபிமன்னன் என் அன்பிற்குரிய மகனைக் கொன்றதுமல்லாமல் பதினாயிரம் இளவரசர்களைத் தோல்வியடையச் செய்து விட்டான். இன்று போர் முடிவதற்குள் எப்படியாவது இந்த அபிமன்னனைக் கொன்று தொலைக்காவிட்டால் இந்த அரசாட்சி, பதவி, பெருமை எல்லாவற்றையும் கைவிட்டு நான் சந்நியாசியாகப் போக வேண்டியதுதான்” -என்று கண்ணீரும் கம்பலையுமாக அவர்களிடம் முறையிட்டான். கேட்டுக் கொண்டிருந்த அரசர்கள் உண்மையாகவே அவனுடைய முறையீட்டில் மனம் நெகிழ்ந்து விட்டனர்.

“அரசர்க்கரசே! தாங்கள் இச்சிறுவனால் விளைந்த தோல்விகளுக்காக மனம் வருந்த வேண்டாம். இன்று போர் முடிவதற்குள் இந்த அபிமன்னனைக் கொன்று தீர்க்கவில்லையென்றால் எங்கள் கைகளில் இருப்பது வில் அல்ல. வெறும் மரமே! இந்தச் சபதத்தை நிறைவேற்றாவிட்டால் நாளை இவ்வில்லைக் கையால் தொட்டுப் போர் புரிய மாட்டோம். இது உறுதி. இந்தக் கணமே தாங்கள் கவலையை விட்டொழிக்கலாம்” -என்று எல்லா அரசர்களும் ஒன்று சேர்ந்து உறுதி மொழி கூறினார்கள். முன்பு தோற்று ஓடிப் போன துரோணன், அசுவத்தாமன், முதலியவர்களும்

அ.கு. - 28