பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

309


“நான் அதற்குச் சொல்ல வரவில்லை சுவாமீ! இரண்டு பக்கமும் சமாதானமாகப் போய்விட்டால் ஓர் உயிருக்கும் சேதமின்றியே நமக்கு நாடு கிடைத்துவிடும். எல்லாம் வல்லவராகிய நீங்கள் என் சார்பில் துரியோதனாதியர்களிடம் தூது சென்று அமைதியாக ஒரு ஏற்பாட்டைச் செய்தால் என்ன? உங்கள் ஒருவரால்தான் அம்மாதிரி ஏற்பாட்டைச் செய்ய முடியும்!”

“ஏன் அப்படிச் சமாதானமாகப் போக வேண்டும்? முறைப்படி உங்களுக்குக் கொடுப்பதாக ஒப்புக் கொண்ட நாட்டை முறை மறந்து கொடுக்க மறுக்கிறான் துரியோதனன். அவனைப் போருக்கு இழுத்துக் கொன்று உங்கள் ஆண்மையை நிலை நாட்டுவது தான் பெருமை.”

“சுவாமீ! உடன் பிறந்தவர்களையும் குருக்களையும் ஞானாசிரியர்களையும், சிற்றப்பன் - பெரியப்பன்மார்களையும் எதிர்த்துக் கொள்ள வேண்டிய போரைச் செய்தால்தான் என்ன பயன்? இப்படிப்பட்ட ஒரு போரைத் துணிந்து செய்ய முற்படுவதைக் காட்டிலும் சஞ்சயன் வந்து சொன்னபடி மீண்டும் காட்டுக்கே போய் விடலாமே!”

“நல்லது தருமா! நீ சொல்லுகிறபடியே காட்டுக்குப் போய்விடும். ஆனால் அன்று பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது உன் தம்பியர்கள் செய்த சபதம் என்ன ஆவது? உலகம் உங்களைப் பற்றி எவ்வளவு கேவலமாகப் பேசும் தெரியுமா?”

“சுவாமீ! என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். ஆனால் என் வேண்டுகோளின்படியே எனக்காக நீங்கள் ஒருமுறை துரியோதனனிடம் தூது சென்று வரவேண்டும். அமைதியாக உரிமையைப் பெற முயல்வோம். எங்கள் நாட்டைத் தருமாறு கேளுங்கள். இயலாவிட்டால் ஐந்து ஊர்களை ஐந்து பேருக்கும் தருமாறு கேளுங்கள். அதுவும் தரமறுத்தால் ஐந்து. வீடுகளையாவது கேளுங்கள், ‘ஒன்றுமே முடியாது’ என்று மறுத்துவிட்டால் இறுதியாகப் போரைச் செய்வோம்” என்று