பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

513

போரை நிறுத்திவிட்டுச் சமாதானமடையுங்கள், பாண்டவர்களுக்குச் சேரவேண்டிய நாடு நகரங்களையும் அரசாட்சியையும் நியாயமாக அவர்களுக்கு அளித்து விடலாம். குடிகெடுக்கும் யுத்தமும் கோபமும் வேண்டாம். பார்க்கப்போனால் பாண்டவர்களும் வேற்றவர்கள் இல்லையே? உன் சகோதரர்கள் அல்லவா?” - என்று அசுவத்தாமன் உருக்கமாகக் கூறிய அறிவுரையை துரியோதனன் ஏற்றுக்கொள்ளவில்லை. “அசுவத்தாமா! அரசாட்சியிலும் நாடு நகரங்களை வென்று ஆள்வதிலும் கூட எனக்கு இன்பமில்லை. ஆனால் நாம் வீரர்கள். மரணத்துக்கும் போர் அழிவிற்கும் பயந்து கொண்டு யுத்தத்தை நிறுத்துவது நம்முடைய ஆண்மைக்கு அழகு இல்லை. ஆகையினால் என்ன நேரிடினும் போரை நிறுத்தவே மாட்டேன்” என்று கர்ணன் மகன் இறந்த செய்தி தெரிந்ததும் துரியோதனன் தானே போர்க்களத்திற்கு நேரில் சென்று கர்ணனைக் கண்டு தன் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டான். அசுவத்தாமனுடைய முயற்சி தோற்றுவிட்டது.

“என் மகனைக் கொன்ற அர்ச்சுனனைப் பழிக்குப் பழி வாங்கினாலொழிய என் மனம் ஆறாது” என்று சபதம் செய்து விட்டு அர்ச்சுனனோடு போரில் ஈடுபட்டான் கர்ணன். அசுவத்தாமன் போர் செய்யும் ஆசையின்றி ஒரு புறமாக ஒதுங்கியிருந்தான். கர்ணன் பக்கம் போய் நின்று கொண்டு அவனுக்கு உதவியாகப் போர் செய்யுமாறு துரியோதனன் வற்புறுத்தினான். அசுவத்தாமனும் அதை மறுக்க முடியாமல் வேண்டா வெறுப்பாக எழுந்திருந்து சென்றான். அசுவத்தாமன், கர்ணன் இருவருமாகச் சேர்ந்து கொண்டு அர்ச்சுனனைத் தாக்கினர். வில்யுத்தம் என்று சொல்லப் படுகின்ற கலையின் சாமர்த்தியங்களை எல்லாம் வெளிக் காட்டினார்கள் கர்ணனும் அர்ச்சுனனும். வில்லைக் கொண்டு குறி தவறாமல் அம்புகளைச் செலுத்துவதற்கு வசதியாகச்

அ.கு. - 23