பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 39 தொடங்கி, 'குழந்தாய்! உன்னுடைய மனசு தங்கமான மனசு! ஒரே இருளாக இருக்கும் இந்த நிர்மானுஷ்யமான இடத்தில் நீ பயப்பட்டு உன்னைப் பற்றிக் கவலைப் படுவதைவிட்டு என்னைப் பற்றிக் கவலைப்பட்டு, என்னைக் காப்பாற்ற எண்ணி வெளியில் வர எத்தனித்தாய் என்பதைக் கேட்க, எனக்கு நிரம்பவும் ஆனந்தமாக இருக்கிறது. நீ நினைக்கிறபடி எனக்கு உண்மையிலேயே வழியில் ஒர் அபாயம் நேரிட்டது. நான் கடைசியாகத் தப்பித்துக் கொண்டு ஓடி வந்தேன். நாம் இந்தக் கதவைத் திறந்து வைத்திருந்தால் அடுத்த நிமிஷத்தில் அந்த முரடர்கள் உள்ளே புகுந்து நமக்கு ஏதேனும் தொந்தரவு செய்வார்கள். நாம் முதலில் கதவை மூடிக்கொண்டு உள்ளே போய் விளக்கேற்றுவோம். நான் போய் வந்த வரலாற்றை எல்லாம், நான் உடனே சொல்லுகிறேன்” என்று கூறியவண்ணம் கதவைச் சாத்த முயல, அப்போதும், கதவை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்த ஷண்முகவடிவு மிகுந்த லஜ்ஜையும், பீதியையும் தோற்றுவித்தவளாய் அவரை நோக்கி, 'சுவாமிகள் சொன்னதுபோலவே செய்வோம். அதற்குள் நான் கொஞ்சம் ஒரு நிமிஷ நேரம் வெளியில் போய் விட்டு வந்து விடுகிறேன். நெடுநேரமாக என்னுடைய உடம்பில் ஒருவித உபாதை இருந்து அதிகரித்துக் கொண்டுவருகிறது. நான் பொறுத்துப்பொறுத்துப் பார்த்தேன். இனி பொறுக்க முடியாது போலிருக்கிறது. இங்கே பக்கத்தில் குளமிருக்கிறது என்று சுவாமிகள் சொன்னீர்களே. அது எந்தப் பக்கத்தில் இருக்கிறது என்பதைச் சொன்னால், நான் போய்விட்டு, ஒரே நிமிஷத்தில் திரும்பி வந்து விடுகிறேன். உடனே கதவை மூடித் தாளிட்டுக்கொள்ளலாம்; பிறகு தாங்கள் எல்லா விவரங்களையும் சொல்லலாம். நான் குளத்தண்டை போய் விட்டு வருவதற்குள் தாங்கள் விளக்கைப் பொருத்தி வைப்பதற்கும் அவகாசம் ஏற்படும் ' என்று நயமாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் கூறினாள். அதைக்கேட்ட கபட சன்னியாசி அதற்கு என்ன் மறுமொழி கூறுவது என்பதை உணராமல் இரண்டொரு நிமிஷ நேரம் தத்தளித்தவராய்,