பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

எண்ணமும் தோன்றின. அந்தப் பணத்தை இழந்தவர், தன்னைப் போல ஒருவேளை ஏழையாக இருந்தால், அந்த எதிர்பாராத நஷ்டத்தால், அந்த மனிதர் எவ்வளவு தூரம் வருந்தித் தவிப்பார் என்றும், அந்தப்பணத்தை சம்பாதிக்க அதன் சொந்தக்காரர் எவ்வளவு தூரம் சிரமப்பட்டிருப்பாரோ என்றும் தான் எவ்விதமான பிரயாசையுமின்றி அன்னியருடைய பணத்தை அபகரித்துக் கொண்டால், அது செரிக்காமல் பலவித வியாதிகளையும் துன்பங் களையும் விசனத்தையும் உண்டாக்குமென்றும் சமயற்காரன் பலவாறு எண்ணமிட்டவனாய் நாற்புறங்களிலும் திரும்பி, யாராகிலும் மனிதர் போகின்றனரோவென்று கவனித்துப் பார்த்தான். எவரும் காணப்படவில்லை . அவன் மேலும் சிறிது நேரம் அவ்விடத்தில் நின்றபடி, அந்தப் பணத்தைத் தான் என்ன செய்கிறது என்பதைக் குறித்து யோசனை செய்தான். அவன் நல்ல கூர்மையான புத்தியும் வியவகார ஞானமும் உடையவன். எவருக்காவது புதையலோ அல்லது வேறு பொருளோ பாதை முதலிய பொது இடங்களிலிருந்து அகப்பட்டால், அதன் கிரயம் 10 ரூபாய்க்கு மேற்படுமானால், அதை அவர் போலீசாரிடம் ஒப்பு விக்க வேண்டு மென்றும், அதற்குக் குறைவான பெறுமான முடைய பொருளாக இருந்தால், அதைக் கண்டெடுத்தவரே எடுத்துக் கொள்ளலாமென்றும் அந்த சமஸ்தானத்தில் சட்டம் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதை அவன் அறிந்தவன். ஆதலால், தான் அதைப் போலீசாரிடம் கொடுத்தால், அவர்கள் சட்டப் பிரகாரம் அதை வாங்கிக் கொள்ளமாட்டார்கள் என்று அவன் உணர்ந்தான். தான் கண்டவர்களிடத்தில் எல்லாம் அதைப்பற்றிப் பிரஸ்தாபம் செய்தால், ஒவ்வொருவரும் அது தம்மால் போடப்பட்டதென்றே சொல்லுவார்கள். ஆதலால், அதன் உண்மையான சொந்தக் காரரிடம் அது போய்ச் சேராதென்ற எண்ணமும் உண்டாயிற்று. ஆகையால், தான் ஒரு யுக்தி செய்யவேண்டும் என்ற யோசனை அவனுக்குத் தோன்றியது.

அந்த நகரத்தில் சுமார் ஆயிரம் வீடுகளே இருந்தமையால், தான் ஒவ்வொரு நாளிலும் சுமார் 50 வீடுகளுக்குச் சென்று, அவ்வீடுகளில் உள்ளவர்கள் இன்ன இடத்திற்கு அருகில் ஏதாவது பொருளை இழந்ததுண்டா என்று விசாரிக்கவேண்டும் என்றும்,

22