பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

ஆவேசமும் கொண்டவனாய், அவனைச் சிறிது நேரம் நிறுத்தும் படி கூறிவிட்டுத் தமது சிம்மாசனத்தின் அடியில் வைக்கப் பட்டிருந்த கைப் பெட்டியை எடுத்து எல்லா ஜனங்களுக்கும் எதிரில் காட்டியபடி திறந்து மூடியை விலக்கினான். அதற்கு தன்னால் வைக்கப்படாத பல புதிய தஸ்தாவேஜிகள் இருந்ததைக் கண்ட அரசன் "ஆ! என்ன ஆச்சரியம்" என்று துள்ளிக் குதித்து, அவைகளை எடுத்துப் படித்துப் பார்த்தான். அதற்குள் ஒன்பது பத்திரங்கள் இருந்தன. ஒவ்வொரு வருஷத்திலும், மேலக் கோட்டை வாசல் ரெவினியூ தாசில்தாரால் சேர்த்தனுப்பப்பட்ட மிகுதிப் பணத்தை அரசனிடத்திலிருந்து வட்டிக் கடனுக்கு வாங்கிக் கொண்டிருப்பதாக அந்த நகரத்திலுள்ள ஒன்பது பெரிய மனிதர்கள் தனித் தனியாக எழுதிக் கொடுத்து பத்திரங்கள் பெட்டியில் இருக்கவே, அதை உணர்ந்த அரசன் ஸ்தம்பித்து ஊமை போலாய் அப்படியே மயங்கித் தமது சிம்மாதனத்தில் சாய்ந்து விட்டான். அதுபோலவே மற்ற உத்தியோகஸ்தர்களும் வியப்பே வடிவமாக மாறிக் கற்சிலைகள்போல அப்படியப்படியே நின்று விட்டனர். சிறிது நேரத்தில் தெளிவடைந்த அரசன் அந்த ஒன்பது பத்திரங்களிலும் குறிக்கப்பட்டிருந்த பெரிய மனிதர்கள் அங்கே இருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்கள் இல்லை என்று உணர்ந்து, உடனே அவர்களது மாளிகைகளுக்கு ஆள்களை அனுப்பி அவர்களை வரவழைத்து விசாரிக்க, அவர்கள் தாங்கள் கடன் வாங்கிக்கொண்டிருப்பது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டனர். யார் மூலமாய் அந்தக் கடன் வாங்கப்பட்டதென்ற கேள்விக்கு, அவர்கள், திவானுடைய சேவகர்கள் யாரோ சிலர் வந்து, அரசனிடம் வட்டிக்குக் கொடுக்கக்கூடிய பணம் இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையானால் தாங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வருவதாகவும், அவர்கள் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு அதைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறியதாகவும், அது போலவே தாங்கள் பத்திரம் எழுதி சேவகர்களிடம் கொடுத்துவிட்டுப் பணம் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறினர். அவ்வாறு பணம் கொடுத்துப் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்ட சேவகர்கள் இன்னின்னார் என்ற அடையாளம் தங்களுக்கு அவ்வளவாகத் தெரியாதென்றும் அவர்கள் கூறினர்.

79