பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தொன்மையானது ; அளவால் மிகப்பெரியது; அளவற்ற பொருட் செலவில் கட்டப்பட்டது; செய்தற்கரியது. மொகலாயர்கள் காலத்தில் கட்டடக் கலை மிகவும் உன்னத நிலையில் இருந்தது. அவர்கள் காலக் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ கட்டடங்கள் டில்லியிலும், ஆக்ராவிலும், பதேபூர் சிக்ரியிலும் எழுப்பப்பட்டன. இருந்தாலும் மொகலாயப் பேரரசின் கலை வரலாற்றில் தாஜ்மகாலே சிறப்பிடம் பெற்றுள்ளது.

இந்திய நாட்டு வரலாற்றில் ஆக்ராவிற்குச் சிறப்பிடம் உண்டு. இந்நகரில் பல அரச பரம்பரையினர் வீற்றிருந்து அரசு புரிந்தனர். முதன் முதலாக ஆக்ரா நகரம் இராசபுத்திரச் சிற்றரசன் ஒருவனுக்கு உரிமையுடையதாக இருந்தது. பிறகு லோடி வம்சத்தினரும், மொகலாயர்களும் இந்நகரைக் கைப்பற்றிக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினர்.

முதன் முதலாக ஆக்ரா நகரில் தன் ஆட்சிப் பீடத்தை அமைத்த மன்னன் சிக்கந்தர் லோடி. மொகலாயப் பரம்பரையை இந்திய நாட்டில் தோற்றுவித்த பாபர் கி. பி. 1526 ஆம் ஆண்டு தன் ஆட்சிப் பீடத்தை ஆக்ராவில் அமைத்துக் கொண்டார். பாபர் வெறும் படைத்தலைவர் மட்டுமல்லர். அவர் பெரிய கலைஞர். அவர் ஆக்ரா நகரில் அழகு மிக்க சோலையொன்றை அமைத்தார்; அச்சோலையின் நடுவே கலையழகோடு கூடிய மாளிகை யொன்றைக் கட்டினார்; அச்சோலையின் நடுவே செயற்கை நீர் ஊற்றுக்-