பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84


அரண்மனையின் வாயில் மிக்க பேரழகுடையது. இதை நக்கர் கானா என்று அழைப்பர். இவ்வாயிலுக்குள் நுழைந்தவுடன், முரசுப் பீடம் தென்படும். இப்பீடத்தின் மேல் முரசங்கள் அணிபெற வைக்கப்பட்டிருக்கும். காவல் மரமும், முரசுக் கட்டிலும் தமிழ் மன்னர்களால் மிகவும் உயர்வாக மதிக்கப்பட்டன என்பதை நாம் சங்க இலக்கியங்களின் மூலமாக அறிந்திருக்கிறோம். அதே போல மொகலாயர்களும் முரசுப் பீடத்தைப் புனித முடைய ஒன்றாகப் போற்றி வந்தனர். அரச குடியினரும், அரசரின் பெரு மதிப்பிற்குரிய அதிகாரிகளுமே இம் முரசை முழக்கும் உரிமை பெற்றவர்கள். இவ்வரச முரசம் நாள்தோறும் ஆறு முறை முழக்கப்படும்.

நக்கர் கானா என்று கூறப்படும் இவ்வழகு மிக்க பெருவாயிலுக்குமேல், மாடம் ஒன்று அமைந்துள்ளது. முரசை முழக்கும் குழுவினர் அம்மாடத்தின் மேல் அணி பெற வீற்றிருப்பர். இப்போது இம்மாடம் பண்டைப் போர்க் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும் பொருட் காட்சி நிலையமாக விளங்குகிறது.

இவ்வாயிலுக்குள் நுழைந்து தான் அரச மாளிகைகளுக்குள் செல்ல வேண்டும். கி. பி. 1754 ஆம் ஆண்டு, பேரரசர் அகமதுஷா இந் நக்கர் கானாவில்தான் படுகொலை செய்யப்பட்டார். மதிற் சுவரின் வாயிலுக்கும் தக்கர் கானாவுக்கும் இடைப்பட்ட வெளியில் அரண்மனைக் காவலுக்கென அமர்த்தப்பட்ட படை வீரர்களின் பாடி அமைந்-