பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கட்டுரைகளின் ஊடே பலபல அரிய உண்மைகளை எடுத்துச் சொல்லிச் செல்கின்றார். “பாரத சமுதாயத்தின் சிறந்த கலைகள், சிற்பம், ஓவியம், நாட்டியம் என்பவைதாம். இவையும், - இவற்றோடு ஒன்றிய கவிதையும் இசையும் சமயச் சார்புடையவைகளாகவே வளர்ந்திருக்கின்றன” என்பர். சிற்பக் கலை, சித்திரம், நடனம், சங்கீதம், கவிதை இவை ஒன்றோடு ஒன்று இணைந்து நிற்பவை என்பதற்கு அவர் கூறும் கதைதான் எவ்வளவு அழகாக இருக்கிறது. சுக்கிர நீதி நூலை மேற்கோள் காட்டி தெய்வீகத் திருவுருவங்களும், பெண்மையும் எவ்வாறு சிற்பத்தில் சிறந்த நிலை வகிக்கின்றன என்று கூறுவது அவர் ஆற்றலைக் காட்டுகிறது. சிற்பத்தையும் காட்டி, கம்பநாடனின்,

குஞ்சரம் அனைய வீரன்
குலவு தோள் தழுவிக் கொண்டாள்

என்ற சொல்லையும் காட்டுவது நம் மனதைவிட்டு என்றுமே அகலாது. அஜந்தா, எல்லோரா, கஜுரஹோ, புவனேச்வரம் முதலிய பல இடங்களில் சிறந்த கலைகளை எல்லாம் எவ்வளவு இனிமையாகக் கூறிச் செல்கின்றார். அடடா இன்னும் எவ்வளவு நூல்கள் இப்பெருந்தகையிடமிருந்து தோன்றி தமிழை வளமுறச் செய்திருக்கும். ஆதலின் அன்றோ அன்று முதல் இன்றுவரை, ஏன் - என்றென்றுமே காலனை மக்கள் கொடியவன் என்பர்.

பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் இரண்டு தலை சிறந்த பணியை தமிழகத்திற்கு செய்திருக்கிறார் என்பது திண்ணம். சிறந்த கலை நூல்களை தமிழில் எழுதி தமிழ் மக்கள் உள்ளத்தில் கலை எழுச்சியை ஏற்படுத்தியது ஒன்று. கலை வளர்த்த தஞ்சையில், தமிழகத்திற்கு புகழ் தேடித்தரும் கலைக்கூடம் அமைத்தது இரண்டு. இவ்விரு