பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

கொண்டே நான் இனி என் ஆயிசுகால பரியந்தம் பிறருக்கு பார மாயில்லாமல் ஜீவனம் செய்துகொள்வேன்' என்று கூறியவண்ணம் அவ்விடத்தை விட்டுச் சரேலென்று நடந்து மறைந்துபோனான்.

சன்மார்க்க முறையை எந்த சமயத்திலும் தான் கைவிடக் கூடாது என்கிற திடமான சித்தத்தோடு அவன் அவ்வாறு கூறி விட்டுச் சென்றானாயினும், அவனது மனநிலைமை அப்போது எவ்விதம் இருந்திருக்கும் என்பதை விவரிப்பதைவிட யூகித்துக் கொள்வதே எளிது. அவன் தனது கொள்கையைக் கடைப்பிடிப் பதில் மகா அபூர்வமான மனவுறுதி உடையவனாக இருந்தாலும், அவன் தனது பெண்சாதி குழந்தைகள் முதலியோரது விஷயத்தில் வாஞ்சையும் இரக்கமும் பச்சாதாபமும் அற்றவனாக இருக்கவில்லை. ஆகவே, தான் வெறுங்கையோடு வீட்டிற்குத் திரும்பிப் போய் அவர்களது கோரமான அவஸ்தையைக் காண்பதை விட, மறுநாளைய பகலில் தனது வழக்கு முடிகிறவரையில் தான் தனது வீட்டிற்கே போகாமல் இருப்பது உசிதமான காரியமென்று அவன் நினைத்து, ஒரு தர்ம சத்திரத்தின் திண்ணையில் படுத்திருந்து இந்த இரவைக் கழித்துவிட்டு, மறுநாள் காலையில் எழுந்து, தனது ஸ்நானம் முதலிய கடமைகளை முடித்துக்கொண்டு சரியாக 11-மணிக்கு திவானுடைய கச்சேரியை அடைந்து, அவ்விடத்திலிருந்த ஒரு குமாஸ்தாவிடம் சென்று ஒரு காகிதம், எழுதுகோல் முதலியவற்றை வாங்கித் தன் கைப்படவே ஒரு பிராது எழுதி அதை திவானிடம் கொடுத்தான்.

அவர் அதை வாங்கி நிதானமாகப் படித்துப் பார்த்தபின் அவனை நோக்கி, “ஏனையா! நீர் நேற்று மாலையில் மிட்டாய் விற்றபோது சிலர் வந்து உம்மைச் சூழ்ந்து கொண்டு உம்மிடம் இருந்த மிட்டாய்த் துண்டுகளை மாதிரி பார்ப்பதாகச் சொல்லி உம்முடைய அநுமதியில்லாமல் அவர்களே எடுத்துத் தின்று விட்டதாகவும், கடைசியாக, அவர்களுள் ஒருவர் உம்முடைய தட்டிலிருந்த காசுகளையெல்லாம் எடுத்துக்கொண்டு ஓடிப் போனதாகவும், பிறகு மற்றவர்களும் போய்விட்டதாகவும் பிராதில் சொல்லி இருக்கிறீர். ஆனால், அப்படி நடந்தது நிஜந்தானா என்பதை ருஜுப்பிப்பதற்கு உம்மைத் தவிர வேறே சாட்சிகள் இன்னார் இன்னார் இருக்கிறார்கள் என்று நீர் எழுதவில்லையே!” என்றார்.

திலொசி-3 33

33