பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

யோசனைகளையும் செய்து கொண்டவனாய்த் தனது வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தான். அவ்விடத்தில் தன் ஜனங்கள் யாராவது இரண்டொருவர் அநேகமாய் இறந்துபோயிருப்பார்கள் என்றும், மற்றவர்கள் மகா கோரமான நிலைமையில் இருப்பார்கள் என்றும் எதிர்பார்த்து மிகுந்த கவலையும் கலக்கமும் கொண்டவனாய் அவன் தயங்கித் தயங்கி தனது வீட்டிற்குள் சென்று பார்க்க அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவ்விடத்தில் அவனது குழந்தைகள் சந்தோஷமாகச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். சுமார் 15-வயதுள்ள அவனது மூத்த பெண் ஏராளமான சாமான்களை வைத்து சமையல் செய்துகொண்டிருந்தாள். அவனது மனைவியும் கஞ்சி அருந்தித் தெளிவடைந்து சந்தோஷமாக இருந்தாள். அந்தக் காட்சி கனவுபோலத் தோன்றியது. தான் காண்பது மெய்யோ பொய்யோ என்று அவன் சிறிது நேரம் சந்தேகித்து ஸ்தம்பித்து நின்றான். குழந்தைகள் தகப்பனைக் கண்டவுடன் "அப்பா! அப்பா!" என்று சந்தோஷ ஆரவாரம் செய்து, ஆசையும் ஆவலும் தோன்ற ஓடிவந்து அவன்மீது பாய்ந்து கட்டிக்கொண்டன, பெரிய குழந்தையொன்று "அப்பா! ஏன் நேற்று இராத்திரி முதல் நீங்கள் வீட்டிற்கு வரவில்லை? சமையல் செய்து வைத்துக்கொண்டு நாங்கள் உங்களுக்காக வெகுநேரம் காத்திருந்தோமே! அக்காள் மறுபடி இப்போது சமையல்செய்து வைத்திருக்கிறாள். வாருங்கள் சாப்பாட்டுக்கு" என்று மிகுந்த வாஞ்சையோடு கூறி அவனைப் பிடித்திழுத்தது. அந்த வார்த்தைகளைக் கேட்ட நமது சமயற்காரன் தனது செவிகளையே நம்பாமல் பிரமித்துப்போய்த் தன்னோடு பேசிய குழந்தையை நோக்கி "ஏனம்மா! நேற்று இரவிலும் இப்போதும் அக்காள் சமயல் செய்ததாகச் சொன்னாயே; சமயலுக்கு வேண்டிய சாமான்களெல்லாம் எங்கிருந்து வந்தன?" என்றான்.

குழந்தை மிகுந்த வியப்போடு, “ஏன் சாமான்களை நீங்கள் தானே அனுப்பினீர்கள்? வேறே யார் நமக்கு இவ்வளவு சாமான்களை அனுப்பப்போகிறார்கள்!" என்றது.

அதைக் கேட்ட சமயற்காரன் சகிக்க இயலாத பிரமிப்பும் வியப்பும் அடைந்து "என்ன என்ன! நானா சாமான்களை அனுப்பினேன்! அப்படி யார் சொன்னது? சாமான்களை எல்லாம் யார் கொண்டு கொடுத்தது? எப்போது சாமான்கள் வந்தன?" என்று

38