பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

அழைத்து சுடுகாட்டுச் சுங்கன் சாவடியிலிருக்கும் சேவகர்களை உடனே அழைத்து வரும்படி உத்தரவு செய்தார். அந்தச் சேவகன் உடனே புறப்பட்டு நிரம்பவும் துரிதமாகச் சென்று கால்நாழிகை நேரத்தில் சுங்கன் சாவடிச் சேவகர்களை அழைத்துக் கொணர்ந்து மகாராஜனுக் கெதிரில் நிறுத்தினான். திவான் அவர்களுள் ஒருவனைப் பார்த்து "நீ என்ன வேலை செய்கிறவன்?" என்றார்.

சேவகன்: எஜமானே! நானும் என்னோடு கூட இதோ இருக்கும் இன்னொருவனும் சுடுகாட்டுச் சங்கன் சாவடியில் வரி வசூல் செய்கிற சேவகர்கள்.

திவான்: நீங்கள் எவ்விதமான வரி வசூல் செய்கிறீர்கள்?

சேவகன்: சுடுகாட்டுக்குள் போகும் ஒவ்வொரு பிணத்துக்கும் ஒவ்வொரு பணம் வசூல் செய்கிறோம்.

திவான்: உங்களை யார் நியமித்தது?

சேவகன்: ரெவினியூ தாசில்தார்.

திவான்: அவருடைய கச்சேரி எங்கே இருக்கிறது?

சேவகன்: மேலக் கோட்டை வாசலுக்குப் பக்கத்தில் இருக் கிறது.

திவான்: அவருடைய பெயர் என்ன வென்பது உனக்குத் தெரியுமா?

சேவகன்: தெரியாது.

திவான்: உங்களுக்கு வேண்டிய புஸ்தகங்களை யார் கொடுக்கிறது?

சேவகன்: அந்தத் தாசில்தார்தான்.

திவான்: நீங்கள் வசூல் செய்யும் வரிப் பணங்களை அவரிடம்தான் செலுத்தி விடுகிறதா?

சேவகன்: ஆம்.

திவான்: உங்களுடைய சம்பளத்தை மாதா மாதம் நீங்கள் யாரிடமிருந்து பெற்றுக் கொள்ளுகிறது?

சேவகன்: அந்தத் தாசில்தாரிடம்தான் பெற்றுக் கொள்ளுகிறது.

60