பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

அதைக்கேட்ட திவான் கலங்கி அயர்ந்து இடிந்து அப்படியே உட்கார்ந்து போய்விட்டார். அவருக்குப் பக்கத்திலேயே இருந்து எல்லா வியவகாரங்களையும் கவனித்துக் கொண்டிருந்த அரசன் திவானைப் பார்த்து, "என்ன திவானே! நீர் இப்போது இந்தத் தாசில்தாரிடம் கேட்ட கேள்விகளை எல்லாம் கவனித்தால், இந்தப் பத்து வருஷ காலமாய் இவ்விதமான கச்சேரி ஒன்று இங்கே இருக்கிறது என்பதையே நீர் தெரிந்து கொள்ளவில்லை என்பது பரிஷ்காரமாக விளங்குகிறது. அதுவுமன்றி, இவர்களால் இந்த ஒன்பது வருஷ காலமாக அனுப்பப்பட்ட மிச்சப்பண மெல்லாம் நம்முடைய கஜானாவிற்கு வந்து சேரவில்லை என்பதும் பரிஷ்காரமாகத் தெரிகிறது. அதுவுமின்றி உமக்குத் தெரியாமல் யாரோ உம்முடைய கையெழுத்தைப் பெற்று ஏராளமான உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாகவும் தெரிகிறது” என்றான்.

திவான் சிறிது நேரம் திகைத்துத் திருடனைப்போல் விழித்து, "நான் ஒவ்வொரு தாக்கீதையும் கவனித்துப் படித்தே கையெழுத்துச் செய்கிறேன். ஆகையால் இங்கே வந்திருக்கும் உத்தரவுகளில் காணப்படும் கையெழுத்துகளெல்லாம் என்னால் செய்யப் பட்டவையே அல்ல. யாரோ சிலர் மறைவாக இருந்துகொண்டு இந்த பிரம்மாண்டமான மோசத்தை நடத்திக்கொண்டு போகிற தாகத் தெரிகிறது. இவர்களால் விதிக்கப்படும் வரிகள் உலகத்தில்வேறே எவராலும் விதிக்கப்படாத அதிசயமான வரிகளாக இருப்பதொன்றே, நான் இதில் சம்பந்தப்படவில்லை என்பதை பரிஷ்காரமாக மெய்ப்பிக்கும். இவர்களால் அனுப்பப்பட்டிருக்கும் பணம் நம்முடைய கஜானாவிற்கு வந்து சேரவே இல்லை. எனக்குத் தாங்கள் எட்டு நாள்கள் வரையில் வாய்தா கொடுத்தால், நான் பிரயத்தனப் பட்டு, உண்மையைக் கண்டு பிடித்துவிடுகிறேன்" என்றார்.

அரசன், “சரி; நீர் கேட்டுக் கொள்ளுகிறபடி உமக்கு வாய்தா கொடுத்திருக்கிறேன். அதற்குள் நான் இந்த வரலாற்றை எல்லாம் கவர்னர் ஜெனரலுக்கு எழுதி அவருடைய உத்தரவைப் பெறுகிறேன். இந்தப் புதிய கச்சேரியை மூடிப் பூட்டி அரக்கு முத்திரை வைத்து காவல் போடுங்கள். இங்கே இருக்கும் தாசில்தார், மற்ற சிப்பந்திகள் எல்லோரையும், விசாரணை முடிகிற வரையில்

67