பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

கிழக்கிந்தியக் கும்பினி லாரன்சுக்கு எழுதிய கடிதத்தில், ‘நாங்கள் எப்போதும் திறமையைப் போற்றுவோம். வீரர்களுக்குச் சிறு சிறு வெகுமதிகளைத் தருவதை விடப் பகிரங்கமான பாராட்டுதல்களை அளிப்பதே சிறந்ததாகும். இக்கண்ணோட்டத்தில்தான், நீங்கள் முகம்மது யூசுப்பைப் பற்றிக் கூறியுள்ள பாராட்டைக் கவனிக்கிறோம். மேலும், கும்பினியின் எல்லாச் சிப்பாய்களுக்கும் ‘கமாண்ட’ராக அவரை நியமிக்கவும் முடிவு செய்துள்ளோம். அதே சமயத்தில், அவருக்குத் தங்கப் பதக்கம் அளிக்கவும் விரும்புகிறோம்,’ என்று மகிழ்வுடன் தெரிவித்திருந்தது. இக்கடிதம் வந்த ஏழே நாளில், கான் சாகிபுக்குக் ‘கமாண்டர்’ (கும்மந்தான்) பட்டமும், அதிகாரமும் வழங்கப் பெற்றன. ‘எல்லாச் சிப்பாய்களுக்கும் தளபதி’ என்ற பொருள் தரும் இந்தப் பட்டத்தை, ஆங்கிலக் கும்பினியின் ஊழியத்தில் இருந்த ஒரு சுதேசி அடைந்தது இதுவே முதல் முறை என்று அறிஞர் ஹில் தம் நூலில் ஆராய்ந்து கூறியுள்ளார்.

சந்தா சாகிபு கொலையுண்டதும், முகம்மது அலி ஆர்க்காட்டு நவாபு ஆனார். கருநாடகத்தில் தங்கள் பலத்தை அசைக்க முடியாத வகையில் நிலைநாட்ட ஆசை கொண்ட ஆங்கிலக் கும்பினி, ஆர்க்காட்டு நவாபின் உரிமைகளைப் பாதுகாக்கும் பெயரால், தென் பாண்டிப் பாளையங்களின் மேல் கர்னல் ஹீரானைப் படையெடுக்கும்படி செய்தது. அவனுக்குத் துணையாகக் கான் சாகிபையும் படை திரட்டிச் செல்லப் பணித்தது. கர்னல் ஹீரான் தலைமையில், 1755ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி