பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

எழுந்த இப்படையெடுப்பே, வீரத்தின் விளைநிலமான தென் பாண்டித் திருநாட்டின் மீது வெள்ளையர்கள் துணிந்து மேற்கொண்ட முதல் படையெடுப்பு. திருச்சியை விட்டுப் புறப்பட்ட ஏகாதிபத்தியப் படை, மதுரை செல்லும் வழியிலுள்ள மணப்பாறையில், தன்னை எதிர்த்த ஒரு பாளையக்காரனை வாட்டி வதைத்துக் கப்பம் கட்டச் செய்தது. அந்தப் ‘புனித’ச் செயலில், கான் சாகிபு தன் கை வரிசையைப் பூரணமாகக் காட்டினான்.

பின்பு கர்னல் ஹீரான் 1755ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி மதுரை போய்ச் சேர்ந்தான். அவ்வமயம், மதுரையைக் கைப்பற்றியிருந்த மியானா என்பவன் அஞ்சி நடுங்கிக் கோவில்குடிக் கோயிலுக்குள் ஓடி ஒளிந்தான். அவ்வாறே, திருநெல்வேலியில் இருந்த முடேமியா, நபி கான் என்ற இருவரும் திருநெல்வேலி மாவட்டத்து மேற்குப் பாளையங்களின் பெருந்தலைவராகிய பூலித் தேவரிடம் சரண் புகுந்தனர். இராமநாதபுரம் மறவர் நாடுகளும், கர்னல் ஹீரான் படையெடுப்புக்குப் பணிந்தன. இப்படி வெற்றி மேல் வெற்றி பெற்ற ஆணவத்தோடு, கர்னல் ஹீரான் கோவில்குடிக் கோயிலைத் தாக்கத் துணிந்தான். அந்தத் தாக்குதலுக்குக் கான் சாகிபையே முன்னோடியாக அனுப்பினான். எமன் போலக் கான் சாகிப் வரும் செய்தி கேட்டுக் கோவில் குடியில் ஒளிந்திருந்த மியானோ தப்பி ஓடி விட்டான். பகைவன் ஓடி ஒளிந்த நிலையிலும், பிரிட்டிஷ் தளபதியின் பேய் உள்ளத்தில் பொங்கி எழுந்த கோபத் தீ அடங்கவில்லை. கையில்