தொல்காப்பியம்-இளம்பூரணர்உரை-எழுத்ததிகார முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்[தொகு]

இளம்பூரணர் உரை[தொகு]

எழுத்ததிகார முன்னுரை[தொகு]

இவ்வதிகாரம் என்னுதலி எடுத்துக்கொள்ளப்பட்டதோ வெனின், அதிகாரம் நுதலியதூஉம் அதிகாரத்தினது பெயர் உரைப்பவே அடங்கும். அதிகாரம் என்னபெயர்த்தோவெனின், எழுத்ததிகாரம் என்னும் பெயர்த்து. எழுத்துணர்த்தினமைக் காரணத்திற் பெற்ற பெயர் என உணர்க.
எழுத்து எனைத்து வகையான் உணர்த்தினாரோவெனின், எட்டுவகையானும், எட்டிறந்த பல்வகையானும் உணர்த்தினார் என்பது.
அவற்றுள் எட்டுவகையாவன:
எழுத்து இனைத்து என்றலும், இன்ன பெயர என்றலும், இன்ன முறைமைய என்றலும், இன்ன அளவின என்றலும், இன்ன பிறப்பின என்றலும், இன்ன புணர்ச்சிய என்றலும், இன்ன வடிவின என்றலும், இன்ன தன்மைய என்றலும். எனவே, அவற்றுள் தன்மையும் வடிவும் ஆசிரியர்தாம் உணருவர் எனினும், நமக்கு உணர்த்தல் அருமையின் ஒழிந்த ஆறுமே இதனுள் உணர்த்தினார் என்க.
இனி எட்டிறந்த பல்வகையான:
உண்மைத்தன்மையும், குறைவும், கூட்டமும், பிரிவும், மயக்கமும், மொழியாக்கமும், நிலையும், இனமும், ஒன்று பலவாதலும், திரிந்ததன் திரிபது வென்றலும், பிறிதென்றலும், அதுவும் பிறிதும் என்றலும், நிலையிற்றென்றலும், நிலயாதென்றலும், நிலையிற்று நிலையாதென்றலும், இன்னோரன்னவும் என இவை. இவையெல்லாம் ஆமாறு மேல்வந்தவழிக் கண்டுகொள்க.
இவ்வதிகாரத் திலக்கணம் கருவியும் செய்கையும் என இருவகைத்து. அவற்றுள், கருவி புறப்புறக் கருவியும், புறக்கருவியும், அகப்புறக் கருவியும், அகக்கருவியும் என நான்கு வகைப்படும்.
செய்கை புறப்புறச்செய்கையும், புறச்செய்கையும், அகப்புறச்செய்கையும், அகச்செய்கையும் என நான்கு வகைப்படும்.
நூன்மரபும், பிறப்பியலும் புறப்புறக்கருவி;
மொழிமரபு புறக்கருவி;
புணரியல் அகப்புறக்கருவி;
"எகர வொகரம் பெயர்க்கீறாகா
முன்னிலை மொழிய வென்மனார் புலவர்" (உயிர்மயங்கியல்-70)
-என்றாற் போல்வன, அகக்கருவி.
"எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யி னுருபுகொளல் வரையார்" (புணரியல்-80)
-என்றாற் போல்வன புறப்புறச் செய்கை.
லனவென வரூஉம் புள்ளி முன்னர்த்
த ந வெனவரிற் றனவா கும்மே (தொகைமரபு-7)
- என்றாற் போல்வன புறச்செய்கை.
உகரமொடு புணரும் புள்ளி யிறுதி
யகரமுமுயிரும் வரும்வழி யியற்கை (தொகைமரபு-20)
-என்றாற் போல்வன அகப்புறச்செய்கை.
தொகைமரபு முதலிய ஓத்தினுள், இன்ன ஈறு இன்னவாறு முடியுமெனச் செய்கை கூறுவன வெல்லாம் அகச்செய்கை.


எழுத்ததிகாரம் அதிகார முன்னுரை முற்றிற்று.[தொகு]

பார்க்க
தொல்காப்பியம்-இளம்பூரணம்
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இளம்பூரணம் சிறப்புப் பாயிரம்
தொல்காப்பியம்-இளம்பூரணர்உரை-எழுத்ததிகார முன்னுரை :[[]]
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்1.நூன்மரபு-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்2.மொழிமரபு-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்3.பிறப்பியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்4.புணரியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்5.தொகைமரபு-இளம்பூரணர் உரை
[[]] :[[]] :[[]]