பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

மலையின் தட்ப வெப்பம் அவர்களுக்குப் பழக்கமான தென்றாலும், அப்பொழுது அவர்கள் அனுபவித்த குளிரைப் போல் அவர்களுடைய வாழ்நாளில் என்றும் அனுபவித்திருக்கமாட்டார்கள்.”

திருவாளர் பெட் (Mr. Bett) என்பார், சேலம் மாவட்டத் தண்டலராகப் பொறுப்பேற்றிருந்தகாலை, காஃபி பயிரிடும் தொழில் வெற்றிகரமாக முன்னேறியது. ஆகையினால் வருவாயை விரும்பி, மக்கள் பெரும் அளவில் அங்குக் குடியேறத் தொடங்கினர். நோய்க்காலத்தில் தங்களுடைய தோட்டங்களை விட்டு வெளியேறியவர்கள் மறுபடியும் குடியேறினர். இயற்கையழகு மிக்க சரிவுகளில் தங்கள் மனைகளை எழுப்பினர். ஆனால் அவ் வீடுகளெல்லாம் ஏர்க்காட்டை விடத் தாழ்வான இடங்களிலேயே அமைக்கப்பட்டன. அவ்விடங்களெல்லாம், எளிதிலே மலேரியாக் காய்ச்சலுக்கு உள்ளாகும் இடங்கள், மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்றவை. ஆனால் ஏர்க்காடு அமைந்திருக்கும் இடம் ஈரமற்றது ; உடல் நலத்தை வளர்ப்பதற்கேற்ற தட்ப வெப்ப நிலையினைக் கொண்டது. ஏர்க்காடு அமைந்திருக்கும் பீட பூமியைச் சுற்றியிருக்கும் மலைச் சரிவுகள் எல்லாம் மலைக் காய்ச்சலுக்கு நிலைக்கலன்கள்.

ஏர்க்காடு :

இவ்வூரின் பெயர்க் காரணங்களாகப் பல கூறுகின்றனர். ஏரிக்கரையில் அமைந்திருப்பதால், முதலில் ‘ஏரிக்காடு’ என்று வழங்கிப் பிறகு ஏர்க்காடு ஆயிற்று என்பர். ‘ஏர்+காடு’ எனப் பிரித்து, அழகிய காடு என்று பொருள் கொள்வாரும் உண்டு. ஏறுகாடு என்ற சொல்லே, ஏர்க்காடு ஆயிற்று என்பர் வேறு சிலர். ‘ஏற்காடு’ என்றும் பலர் எழுதுகின்றனர்.

இந் நகரமானது சேர்வராயன் மலை மீதுள்ள பீட பூமியின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இது