பக்கம்:கண்ணகிக் கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கண்ணகி கதை


பாட்டு

வானுலகில் இந்திரன் சிந்தைமகிழ் சபையில்
வானவர்கள் முனிவர்கள் வந்துவந் திருந்தார்
இந்திரனின் மைந்தனவன் எழில்நிறை சயந்தன்
சுந்தரக் கோலமொடு வந்தரு கிருந்தான்
பேரழகி ஊர்வசி சீர்நடனம் ஆட
ஆர்சபை யமர்ந்தவர் அகங்களிப் புற்றார்
சயந்தன்மேல் பேரன்பு சாரும்ஊர் வசியாள்
நயந்தவனை நோக்கியே நாட்டியம தாடினாள்
காதல்வெறி யேறவே களிநடனம் மாறவே
தீதுபல கண்டனன் தெய்வமுனி அகத்தியன்
கோபமது கொண்டனன் குறுமுனி அகத்தியன்
சாபமது தந்திடத் தவமுனி எழுந்தனன்
ஒய்யார நடனங்கள் ஆடும்ஊர் வசியே!
செய்யாத குற்றங்கள் செய்ததுன் மதியே
தவமுனிவர் பல்லோர்கள் சார்ந்தபே ரவையை
அவமதிப் பதுபோலத் தவறாக ஆடினாய்
இந்திரன் சபையென்னும் எண்ணத்தை விட்டாய்
சிந்தையில் தகாதபல் சிந்தனைகள் கொண்டாய்
கடமையை மறந்தாய் கருத்தினை இழந்தாய்
மடமையால் ஊர்வசி மண்ணுலகு செல்வாய்
எனச்சபித் திட்டனன் இனியதமிழ் முனிவன்
கனங்குழையின் ஊர்வசி காசினி பிறந்தாள்
காவிரிப்பூம் பட்டினக் கணிகையர் குலத்திலே
மாதவிநன் மங்கையாய் மாநிலம் உதித்தாள்
ஊர்வசியின் அவதாரம் ஒப்பற்ற மாதவி
பேர்பெற்ற சீருற்ற பெருநடன மாதவள்
அத்தகைய மாதவியின் அருமரபில் வந்தாள்
சித்திரா பதிபெற்ற செய்யகலை வாணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/17&oldid=1396413" இலிருந்து மீள்விக்கப்பட்டது