பக்கம்:கண்ணகிக் கதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50

கண்ணகி கதை

வாயிலோன் சொன்னமொழி
மன்னவனும் கேட்டுணர்ந்தான்
ஆயிழையை அழைத்துவர
அனுமதியும் தந்தோமென்றான்
கண்ணகியும் சபையடைந்தாள்
காவலனும் கேட்கலுற்றான்
கண்ணீர் சொரியவந்த
காரிகையே! நீயார்! என்றான்
தேவர்களும் வியக்குமாறு
சிறுபுறவின் துயரைப்போக்கப்
பாவியசீர்த் துலையிற்புக்க
பார்த்திபன் ஆண்டநாடு
ஆவொன்றின் துயரம்போக்க
அருந்தேரை மகன்மேல்விட்ட
காவலன் ஆண்டநாட்டில்
காவிரிப்பூம் பட்டினமாகும்
அந்நகரில் வணிகர்மரபில்
அவதரித்த கோவலனாவான்
துன்னியமுன் ஊழ்வினை தன்னால்
துரத்தப்பட் டிந்நகர்வந்தான்
சிலம்பொன்று விற்கவந்து
தீயகொலைத் தண்டனையுற்றான்
நலமிக்க கோவலன்மனைவி
நங்கைஎன் பெயர்கண்ணகியாம்
தேராத மன்னா!உன்னால்
தீராத பெரும்பழியுற்றேன்
சீரான என்றன்கணவன்
தீயபெருங் கள்வனானான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/49&oldid=1298034" இலிருந்து மீள்விக்கப்பட்டது