என் சரித்திரம்/47 அன்பு மூர்த்திகள் மூவர்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—47

அன்பு மூர்த்திகள் மூவர்


ன்பு மூர்த்திகள் மூவர் திருவாவடுதுறை மடத்தில் இருவகைப் பாடங்களும் காலையிலும் மாலையிலும் முறையாக நடந்து வந்தன. சுப்பிரமணிய தேசிகருடைய அன்பு என்மேல் வர வர அதிகமாகப் பதியத்தொடங்கியது. பிள்ளையவர்களுக்கு என்பாலுள்ள அன்பின் மிகுதியை அறிந்த தேசிகர் என்னிடம் அதிக ஆதரவு காட்டினர். அவ்விருவருடைய அன்பினாலும் மற்றவர்களுடைய பிரியத்தையும் நான் சம்பாதித்தேன். மடத்திலே பழகுபவர்கள் என்னையும் மடத்தைச் சார்ந்த ஒருவனாகவே மதிக்கலாயினர். மடத்து உத்தியோகஸ்தர்கள் என்னிடம் பிரியமாகப் பேசி வந்தவுடன் எனக்கு ஏதேனும் தேவை இருந்தால் உடனே கொடுத்து உதவித் தங்கள் அன்பைப் பலப்படுத்தினர். எல்லோருடைய அன்பும் நிலைத்திருக்க வேண்டுமென்ற கவலையால் யாரிடமும் நான் மிகவும் பணிவாகவும் ஜாக்கிரதையாகவும் நடப்பதை ஒருவிரதமாக மேற்கொண்டேன்.

‘சந்நிதானத்தின் உத்தரவு’

மாசி மாதம் மகாசிவராத்திரி வந்தது. திருவாவடுதுறையில் உள்ளவர்களுக்கு ஏதேனும் சாமான்கள் வேண்டுமானால் மடத்து உக்கிராணத்திலிருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டும். அக்காலத்தில் அவ்வூரில் கடைகள் இல்லை. சிவராத்திரியாதலால் மாலையில் கோமுத்தீசுவரர் ஆலயத்துக்குச் சென்று ஸ்வாமி தரிசனம்செய்ய எண்ணினேன். தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை முதலியவை வேண்டும். கடைகளோ இல்லை. ஆதலால் ‘மடத்து உக்கிராணத்திலே வாங்கிக்கொள்ளலாம்’ என்று நினைத்துக் காலைப் பாடம் முடிந்தவுடன் அவ்விடத்தையடைந்து வெளியில் நின்றபடியே உக்கிரணக்காரரிடம் எனக்கு வேண்டியவற்றைச் சொன்னேன். “ஐயரவர்கள் எப்போது எது கேட்டாலும் கொடுக்கவேண்டுமென்று சந்நிதானத்தில் உத்தரவு” என்று கணீரென்று ஒரு சப்தம் கேட்டது. அசரீரி வாக்கைப்போன்ற அவ்வொலி எங்கிருந்த வந்ததென்று கவனித்தேன். கந்தசாமி ஓதுவாரென்பவர் அவ்வாறு சொல்லிக்கொண்டே வந்தார். அங்கே அயலிலிருந்த ஒரு ஜன்னலுக்கு அப்புறத்தில் பண்டார சந்நிதிகள் அமர்ந்திருந்ததைக் கண்டேன். உடனே எனக்குச் சிறிது நாணம் உண்டாயிற்று. “எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாமென்று உத்தரவாகிறது” என்று அருகில் வந்த ஓதுவார் மீட்டும் சொன்னார். அதனை உறுதிப்படுத்துவது போலத் தேசிகர் புன்னகை பூத்தார். வேண்டிய பொருள்களையெல்லாம் தடையின்றி நான் பெற்றுக்கொண்டேன். இயல்பாகவே வேண்டும்போது எனக்கு உதவிவரும் அந்த உக்கிராணக்காரர் அன்று முதல் என் குறிப்பறிந்து எனக்கு வேண்டுவனவற்றை அப்பொழுதப்பொழுது உதவிவந்தார். பிற்காலத்திலும் எனக்கு வேண்டிய பொருள்களை வேண்டிய சமயங்களில் அந்த உக்கிராணம் கொடுப்பதும் நான் பெற்றுக்கொள்வதும் வழக்கமாயின.

காலைப் பாடத்தில் திருவானைக்காப் புராணம் முற்றுப்பெற்றது. அதன்பின் திருநாகைக்காரோணப் புராணம் ஆரம்பமாயிற்று. முன்னரே அந்நூலை நான் பட்டீச்சுரத்திலே பாடங் கேட்டிருந்தமையால் மடத்திற் படிக்கும்போது மிக்க தெளிவோடு படித்தேன். அவ்வப்போது இன்ன இன்ன ராகத்தில் படிக்கவேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் கூறுவார். அங்ஙனமே நான் படிப்பேன்.

ஓதுவாரது அன்பு

ஒருநாள் காலையில் மடத்திலிருந்து வெளியே வந்து ஆகாரம் செய்யும் இடத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது மணி பதினொன்றுக்கு மேல் இருக்கும். எனக்கெதிரே மடைப்பள்ளி விசாரணைக்காரராகிய முத்துசாமி ஓதுவாரென்பவர் வந்தார். அவருடைய அன்பும் மரியாதையும் எப்போது கண்டாலும் அவரோடு சில வார்த்தைகள் பேசவேண்டுமென்று என்னைத் தூண்டும். ஆதலால் அவரைப் பார்த்தவுடன், “கிழக்கேயிருந்து வருகிறீர்களே; அக்கிரகாரத்தில் ஏதேனும் வேலை இருந்ததோ!” என்று கேட்டேன்.

“ஐயாவையும் அம்மாவையும் பார்த்துவிட்டு வருகிறேன்” என்றார்.

“உங்கள் வீடு வடக்கு வீதியில் அல்லவா இருக்கிறது? இங்கே உங்கள் தாயார் தகப்பனார் வரக் காரணம் என்ன?”

“இல்லை. அண்ணாவுடைய ஐயா, அம்மா வந்திருக்கிறார்கள்” என்று அவர் சொன்னவுடனே, “என்ன! எங்கே வந்தார்கள்?” என்று பரபரப்போடு அவர்களைப் பார்க்க வேண்டுமென்ற என் ஆவலைப் புலப்படுத்தினேன்.

ஓதுவார் பிராயத்தில் என்னைவிட முதிர்ந்தவராக இருந்தாலும் என்னை அண்ணாவென்றே அழைத்துவந்தார். என் பெற்றோர்கள் அன்றைத்தினம் வருவதாக எனக்கு முன்னமே தெரிவிக்கவில்லை. அவர்களை நான் எதிர்ப்பார்க்கவுமில்லை. “அவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்களோ? பழக்கமில்லாத இடமாயிற்றே! சாப்பிடும் நேரமாயிற்றே! அப்பா பூஜை பண்ணவேண்டுமே!” என்றெல்லாம் நான் விரிவாக யோசனை செய்தேன். என் உள்ளத்து உணர்ச்சிகளை முகக்குறிப்பால் ஒருவாறு ஊகித்துணர்ந்த ஓதுவார், “கவலைப்பட வேண்டாம். அவர்கள் காலையிலே வந்துவிட்டார்கள். அவர்கள் வந்து அண்ணாவைப் பற்றி விசாரித்தபோதே இன்னாரென்று தெரிந்துகொண்டேன். அவர்களுக்குச் சத்திரத்தில் தக்க இடம்கொடுத்து வேண்டிய சாமான்களை அனுப்பினேன். ஐயாவின் பூஜைக்குவேண்டிய பால் முதலிய திரவியங்களையும் அனுப்பியிருக்கிறேன். அவர்கள் அங்கே ஸ்நானத்தையும் பூஜையையும் முடித்துக்கொண்டு அண்ணாவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். போய் ஆகாரம் செய்யவேண்டியதுதான். இப்போது அங்கே போய் விசாரித்துவிட்டுத்தான் வருகிறேன்” என்றார்.

எனக்குத் தெரியாமலே நிகழ்ந்த அச்செயல்களைக் கேட்டு நான் ஆச்சரியமடைந்தேன். ஓதுவாருடைய அன்பையும் விதரணையையும் மடத்தில் உள்ள ஒழுங்கையும் பாராட்டியபடியே நான் விரைவாக என் தாய், தந்தையர் உள்ள இடத்துக்குச் சென்றேன்.

பெற்றோர் மகிழ்ச்சி

நான் அங்கே போனவுடன், “எப்படிப்பட்ட மனுஷ்யர்கள்! என்ன ஏற்பாடுகள்! என்ன விசாரணை!” என்று என் தந்தையார் தம் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். “சாமா, இம்மாதிரியான இடத்தை நான் பார்த்ததேயில்லை. நாங்கள் உன்னைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று இன்று காலையில் இங்கு வந்தோம். சிலர் சத்திரத்தில் தங்கலாமென்று சொன்னார்கள். அப்போது இவ்விடம் வந்தோம். இங்கே ஒருவர் எதிர்ப்பட்டார். ‘நீங்கள் யார்?’ என்று கேட்டார். உன்னைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னேன். உடனே எங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் விசாரித்து விசாரித்துக் கொடுத்து உதவினார். “இந்த மாதிரியான மனுஷ்யர்களை நான் இதுவரை பார்த்ததில்லை அவர் யார்?” என்று என் தாயாரும் கேட்டார்.

“அவர் எனக்கு ஒரு தம்பி” என்று மனத்துக்குள்ளே சொல்லிக்கொண்டேன். ஓதுவாருடைய அன்பை என் மனம் நன்றாக அறியும். அவர்களுக்கு அவ்வளவு தெரியாதல்லவா?

“உன் தம்பியைப் பார்த்தாயா?” என்று கேட்டுக்கொண்டே குழந்தையாக இருந்த என் தம்பியை என்னிடம் அன்னையார் அளித்தார். நான் சந்தோஷமாக வாங்கி அணைத்துக்கொண்டேன். அன்னையார் சமைத்துத் தந்தையார் பூஜையில் நிவேதனம் செய்யப்பெற்ற உணவை நான் உண்டு பல நாளாயின. அன்று அவ்வுணவை உண்டு மகிழ்ந்தேன். நான் நல்ல இடத்தில் இருக்கிறேன் என்ற திருப்தியால் அவர்களும் மகிழ்ந்தார்கள்.

ராக மாலிகை

அன்றைய தினம் ஏதோ ஒரு காரணத்தால் காலையில் நடக்கவேண்டிய பாடம் பிற்பகல் மூன்றுமணி முதல் ஏழுமணி வரையில் மடத்திலுள்ள பன்னீர்க்கட்டில் நடந்தது. சில நாட்களில் அவ்வாறு நடப்பதுண்டு. பாடம் நடக்கையில் சுப்பிரமணிய தேசிகர் அங்கே வந்து அமர்ந்திருந்தார். குமாரசாமித் தம்பிரானும் நானும் பாடங்கேட்டு வந்தோம். பிள்ளையவர்கள் சொன்னபடி நான் திருநாகைக்காரோணப் புராணத்தைப் படித்தேன். என் பெற்றோர்களைக் கண்ட சந்தோஷமும் என் அன்னையார் இட்ட உணவை உண்ட உரமும் சேர்ந்து எனக்கு ஒரு புதிய ஊக்கத்தை உண்டாக்கின. அதனால் அன்று நான் படித்தபோது ஒவ்வொரு செய்யுளையும் ஒவ்வொரு ராகத்தில் மாற்றிமாற்றி வாசித்தேன். சங்கீதப் பிரியராகிய தேசிகர் ராகங்களைக் கவனித்து வந்தார். இடையிலே பிள்ளையவர்களைப் பார்த்து, “உங்கள் சிஷ்யர் ராகமாலிகையில் படிப்பது திருப்திகரமாக இருக்கிறது” என்றார்.

இவ்வாறு பாடம் நடக்கையில் வடக்குப் புறத்தேயுள்ள ஓரிடத்தில் சிறிது தூரத்தே சிலர் மறைவாக இருந்து கவனிப்பது வழக்கம். அன்றும் அப்படியே சிலர் இருந்தனர். என் தந்தையார் மாலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு அப்பக்கமாக வந்தவர் பாடம் நடப்பதையும் சிலர் தூரத்திலே இருந்து கவனிப்பதையும் கண்டு தாமும் அவர்களோடு ஒருவராக அங்கே இருந்து நான் படிப்பதையும் பிள்ளையவர்கள் பொருள் சொல்வதையும் கேட்டு வந்தார். அவர் வந்து கேட்டது எனக்குத் தெரியாது.

நான் ராகத்தோடு வாசிப்பதைக் கேட்டு அவரும் மகிழ்வுற்றார். நான் படிப்பதைப் பற்றிச் சுப்பிரமணிய தேசிகர் பாராட்டிப் பேசிய வார்த்தைகள் அவர் காதில் விழுந்தன. அப்போது அவருக்கு உண்டான சந்தோஷத்துக்கும் திருப்திக்கும் அளவுகூற முடியுமோ! இந்நிகழ்ச்சி முன்னேற்பாட்டோடு நடந்ததுபோல் இருந்தது. தற்செயலாக என் தந்தையார் அங்கே வந்ததும், நான் ராகமாலிகையில் படித்ததும் தேசிகர் பாராட்டித் தம் அன்பை வெளிப்படுத்தியதும் என் தந்தையார் மனத்தில் இருந்த கவலையைப் போக்கவும் ‘இவனுக்கு ஒரு குறைவும் இல்லை’ என்ற தைரியத்தை உண்டாக்கவும் காரணமாயின. பாடம் முடிந்தவுடன் எல்லோரும் எழுந்து வந்தோம்.

நான் முன்னே வந்தேன். ஆசிரியர் பின்னே சிறிது தூரத்தில் தம்பிரான்களோடு வரலாயினர். நான் வரும் வழியில் தந்தையாரைக் கண்டபோது, “அப்பா! நீ படித்ததைக் கேட்டேன். பண்டார சந்நிதிகள் சொன்ன வார்த்தைகளையும் கவனித்தேன். எல்லாம் ஈசுவரானுக்கிரகந்தான்” என்று சொன்னபோது உள்ளே இருந்த உணர்ச்சி பொங்கி வந்தது. மேலே பேசத் தெரியவில்லை. அவர் ஜாகைக்குச் சென்றார். பின் வருவதாகச் சொல்லி நான் மீண்டும் ஆசிரியரோடு சேர்ந்துகொண்டேன்.

இரு முதுகுரவரும் ஆசிரியரும்

ஒவ்வொரு நாளும் மாலையில் ஆசிரியரோடு திருவாவடுதுறையிலுள்ள கோட்டுமாங்குளம் வரைக்கும் சென்று அனுஷ்டானங்களை முடித்துவிட்டு வருவது என் வழக்கம். இருட்டு வேளைகளில் ஆசிரியர் கையைப் பிடித்து அழைத்து வருவேன். அன்றைத் தினமும் அவ்வாறு சென்று திரும்பும்போது, “உம்முடைய தாயார், தகப்பனார் வந்திருப்பதாகச் சொன்னீரே; அவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள்? இப்போது பார்த்துவிட்டுப் போகிறேன்” என்றார்.

“சிரமம் வேண்டாம். அவர்களே ஐயாவைப் பார்க்க வருவார்கள்” என்று நான் சொல்லியும் அவர் வற்புறுத்தவே, அவரை என் பெற்றோர்களிடம் அழைத்துச் சென்றேன்.

சத்திரத்தில் ஒரு விசிப்பலகையில் ஆசிரியர் அமர்ந்தார். தந்தையாரும் அமர்ந்தார். தந்தையாரிடம் ஆசிரியர் யோக க்ஷேமங்களை விசாரித்துக்கொண்டு இருந்தபோது என் தாயார் வந்தார். அதற்கு முன் ஆசிரியரை அவர் பார்த்ததே இல்லை.

“குழந்தையை நீங்களே தாயார், தகப்பனாரைப்போலக் காப்பாற்றி வருகிறீர்கள். நாங்கள் எந்தவிதத்திலும் இவனுக்குப் பிரயோசனப்படாமல் இருக்கிறோம். உங்களுடைய ஆதரவினால்தான் இவன் முன்னுக்கு வரவேண்டும்” என்று கண்ணில் நீர்ததும்ப அவர் சொன்னார். ஒரு தெய்வத்தினிடத்தில் வரங்கேட்பது போல இருந்தது அந்தத் தொனி.

“நீங்கள் கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். உங்கள் குமாரர் நல்ல புத்திசாலி, நன்றாகப் படித்து வருகிறார். கடவுள் கிருபையால் நல்ல நிலைமைக்கு வருவார்” என்று ஆசிரியர் கூறிய வார்த்தைகள் என் தாயாரின் உள்ளத்தைக் குளிர்வித்தன. என்னிடம் அன்பு வைப்பவர்களுக்குள்ளே அந்த மூன்று பேர்களுக்கு இணையானவர்கள் வேறு இல்லை. அம்மூவரும் ஒருங்கே இருந்து என் நன்மையைக் குறித்துப் பேசும்போது அவர்களுடைய அன்பு வெளிப்பட்டது. அந்த மூவருடைய அன்பிலும் மூன்றுவிதமான இயல்புகள் இருந்தன. அவற்றினிடையே உயர்வு, தாழ்வு உண்டென்று சொல்ல முடியுமா? இன்ன வகையில் இன்னது சிறந்தது என்றுதான் வரையறுக்க முடியுமா? ஒரே அன்புமயமாகத் தோற்றிய அக்காட்சியை இப்போது நினைத்தாலும் என் உள்ளத்துள் இன்பம் ஊறுகின்றது. அம்மூவரையும் மூன்று அன்பு மூர்த்திகளாக இன்றும் பாராட்டி வருகிறேன்.

மறுநாள் விடியற் காலையில் என் பெற்றோர்கள், “உன்னைப் பார்த்துவிட்டுப் போகத்தான் வந்தோம். பார்த்ததில் மிகவும் திருப்தியாயிற்று. ஊருக்குப் போய் வருகிறோம். உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்” என்று என்னிடம் சொல்லிவிட்டுச் சூரியமூலைக்கு என் தம்பியுடன் போனார்கள்.