பக்கம்:ஊரார்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


சாமியார் காப்பி குடித்தார். சுற்றுமுற்றும் பாரத்தார். பெரிய வீடு. இரண்டு கட்டு. முற்றத்துக்கு மேலே 'பந்தோபஸ்து' கம்பி போட்டிருந்தது. நெல் மூட்டைகள் அடுக்கியிருந்தன. குருவிகள் நெல் மணிகளைக் கொத்திக் கொண்டிருந்தன. கையில் கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு தகர டப்பாவை எடுத்து அதற்குள்ளிருந்து லேகியத்தை எடுத்து கச்சக்காய் அளவுக்கு உருட்டினார்.

"எங்கே, வரச் சொல்லுங்க அம்மாவை" என்றார்.

“குமாரு, வனஜாவைக் கூப்பிடுடா" என்றான் வேதாசலம்.

பின் கட்டிலிருந்து வனஜா வந்து நின்றாள். ஐம்பொன் விக்கிரகம் மாதிரி. சின்ன வயசு. மூக்கு தீர்மையாக இருந்தது. வைர பேசரி போட்டிருந்தாள். சிரித்த முகத்தில் சோகம் தெரிந்தது. நெற்றியிலே பொட்டில்லை.

"நாக்கை நீட்டும்மா..."

நீட்டினாள்.

கையைப் பிடித்து நாடி பார்த்தார். கண்களையும் பார்த்தார்.

"வாயிலெடுத்தியா?"

"இப்பக்கூட சத்தம் கேட்டுதே” என்றான் வேதாசலம்.

“இந்தா, இந்த லேகியத்தைச் சாப்பிடு. இன்னும் ஒரு மணி நேரம் களிச்சு, ஊற வைச்ச எள் தண்ணியை எடுத்துப் பனவெல்லம் கலந்து சாப்பிடு. பானகம் மாதிரி இருக்கும். தண்ணிலே வெல்லம் கரையற மாதிரி அதுவும் கரைஞ்சிடும். ரெண்டே தினத்திலே சரியாப் போயிடும், கவலைப்படாதே போ" என்றார் சாமியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/16&oldid=1284211" இலிருந்து மீள்விக்கப்பட்டது