பக்கம்:எனது நண்பர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கி. ஆ. பெ. விசுவநாதம்  17

தமிழ்ப் புலவர்களிடத்தில் மட்டுமே இக்கேள்வியைக் கேட்கிறதே. இது ஏன் தமிழைப் படித்தீர்கள்? என்று கேட்பதுபோல் இருக்கிறது’ என்றார்.

அதையும் வழங்குவதாக ஒப்புக்கொண்டு வந்து, அவர் குறித்த அத்தனை பொருள்களையும், அகலம், நீளம், உயரம், அளவு, எண்ணிக்கை, எடை தவறாமல் வாங்கி வைத்து விட்டேன். இதற்கு எனக்கு ஆறு நாட்கள் பிடித்தன. அவர் இரண்டு நாள் தங்குவதற்காகக் கேட்டிருந்த அமைப்பில் திருச்சிராப்பள்ளியிலேயே விடுகள் இல்லை. இருந்த இரண்டொரு வீடுகளும் காலியாக இல்லை. அளவு கடந்த முயற்சி எடுத்து அதையும் கண்டு பிடித்து வழங்கி, ஒரு பெரிய போரில் வெற்றி பெற்றதைப் போன்று மகிழ்ந்தேன்.

குறித்த நாளில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் சைவ சித்தாந்த சபையின் ஆண்டு விழாத் தொடங்குகின்ற நேரம். எல்லோரும் வந்துவிட்டார்கள். 9–15 ஆகியும் தலைவர் வரவில்லை. கூட்டத்தில் ஒரு பெரிய சலசலப்பு. எல்லோர் கையிலும் துண்டு அறிக்கைகள். அதில் மறைமலையடிகள் ஒரு சைவரா: என்ற தலைப்பில் சில கேள்விகள் அச்சிடப் பெற்றிருந்தன. இது வந்திருந்தோர் உள்ளத்தில் ஒரு குழப்பத்தையும், தலைவர் உள்ளத்தில் ஒரு வருத்தத்தையும் உண்டாக்கிவிட்டது. தலைவர் வராமைக்குக் காரணம் அது தான் என அறிந்தேன். துண்டு அறிக்கையை வழங்கியவர் உறையூர் புலவர் பெரியசாமிப்பிள்ளை எனத் தெரியவந்தது. அவருக்கு ‘உறந்தைப் பெருந்தேவனார்’ என்ற பெயரும் உண்டு. சைவ மடங்கள் பலவற்றில் அவருக்குச் செல்வாக்குண்டு.

உடனே தலைவரிடஞ் சென்று கூட்டத்திற்கு வந்து தலைமை வகித்து விழாவை நடத்திக் கொடுக்க வேண்டுமென்று அழைத்தேன். அவர் “உறந்தைப் பெருந்தேவனாரை உங்களுக்குத் தெரியுமா? அவர் இங்கு வந்து

எ. ந.—2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/18&oldid=986298" இலிருந்து மீள்விக்கப்பட்டது