பக்கம்:தாய்லாந்து.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேறு காட்சிகளைத் தத்ரூபமாய்ச் செய்து காட்டுகிறார்கள். வெளிநாட்டுக்காரர்கள் ஆவலோடு அங்கே நாள்தோறும் தேர்த் திருவிழா போல் வந்து கூடுகிறார்கள். கோழிச்சண்டை, கத்திச் சண்டை, குத்துச்சண்டை, யானைகளின் சாகசங்கள், தாய் நடனம், கிராமியப் பாடல், வீர விளையாட்டு என்று ஏகப்பட்ட அய்ட்டங்களைப் பரபரவென்று இரண்டே மணி அவகாசத்தில் நடத்தி முடிக்கிறார்கள்.

நிகழ்ச்சியின் க்ளைமாக்ஸ் ‘தாய்’ நாட்டுத் திருமணச் சடங்குதான்! தத்ரூபமாய் ஒரு கல்யாணத்தையே மேளதாளத்துடன் நடத்தி விடுகிறார்கள். திருமணத்தின்போது ஏழு ஸ்வரங்களுக்கும் தனித்தனியே ஏழுவாத்தியங்கள் வைத்து அவற்றை ஸப்த கன்னியர்கள் வாசிப்பது கண்ணுக்கும் காதுக்கும் இனிமைதரும் நிகழ்ச்சி!

முதலில் சீர்வரிசைகள் வருகின்றன. அப்புறம் புரோகிதர்கள் வருகிறார்கள். மணமக்களை மேடையில் உட்கார வைத்து மணமகள் தலையில் கொத்தாக நூல் செண்டு ஒன்றைச் சுற்றி நூலிழை அறுபடாமல் அப்படியே மணமகன் தலையில் சேர்த்துக் கட்டி விடுகிறார்கள். நம் நாட்டில் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவது போல அங்கே தலையில் நூலைக் கட்டுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்!

இங்கே நம்மூரில் கணவனுக்குக் கோபம் வந்தால், ‘உன்னை என் தலையில் கட்டி விட்டார்களே’ என்று அலுத்துக் கொள்வது உண்டல்லவா! அங்கே நிஜமாகவே தலையில் கட்டி விடுகிறார்கள்!

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/14&oldid=1075185" இலிருந்து மீள்விக்கப்பட்டது