பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காவலாளி


கொள்ளை இருட்டு கொள்ளையர்களே வேட்டைக்கு வரத்தயங்கும் இருள் மயம்... அந்த கட்டிடத்திற்கு பின்னணியாக உள்ள பாறைப் பொந்துகளும், அவைகளின் பின்புலமான மலைக் குவியல்களும், மரம், செடி, கொடிகளும், மங்கிப் போகாமலே மறைந்து போய் விட்டன. சாலையில் ஒளி உருளைகளாய் செல்லும் வாகனங்களைக்கூட காண முடியவில்லை. ஒப்புக்குக்கூட ஒரு மின்மினிப் பூச்சி இல்லை...

கதிர்வேலுக்கு லேசாய் பயம் பிடித்தது. உடலை சல்லடை செய்வதுபோல் அரித்தத கொசுக்களைக்கூட 'ஆள் துணையாக,' அவன் விட்டு வைத்தான். அவை அவன் காதுகளில் ஏறி நின்று போட்ட சத்தம் கூட அவனுக்கு ஒரு துணையாகத் தோன்றியது. இப்படிப்பட்ட இருளை அவன் எப்போதுமே பார்த்ததில்லை... உடலில் சோர்வு தட்டியது. இன்று காலை ஐந்து மணிக்கே எழுந்து அந்த சுற்றுலா மாளிகையின் நான்கு அறைகளையும் பெருக்கி முடித்துவிட்டு, செடி கொடிகளின் நீர்தாகத்தை தணித்துவிட்டு, கரடு முரடான மேட்டுப் பகுதியை, கொத்திப் போட்டு, மேற்பார்வையாளரின் கூப்பிட்ட குரலுக்கெல்லாம் ஓடி ஓடி, டவுனுக்கும் இந்த மாளிகைக்கும் அலைந்து, அலைந்து, இறுதியில், 'இது நான்தானா'... என் பெயர் கதிர் வேலா... என்ற பிரமை வந்தபோது, வழக்கமாக வரும் மின்சாரம் கட்டறுந்து, இருள் கட்டவிழ்க்கப்பட்டது. கதிர்வேலு தன் உடல் சோர்வை, நியாயப்படுத்திக் கொண்டான். இரண்டு வாட்ச்மேன் வேலைகளை மட்டுமில்லாமல், தோட்டி கார்டனர் ஆகிய அத்தனை வேலைகளையும் அவன் ஒருவனே செய்கிறான். அதுவும் தினக் கூலி நாற்பது ரூபாய்க்காக... இதுக்காக மட்டுமா... இல்லை... இந்த தற்காலிக பணி நிரந்தரமாகனும்... அதுக்கு பாடுபட்டால்தான் முடியும்... கூடவே ஒரு