பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

வீட்டிலேயே அடைபட்ட நிலையினராய் இருந்தனர். ஆண் மக்கள் கலந்து கொள்ளும் எத்தகைய பொது திகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்புப் பெறாதவராய் விளங்கினர்.

“சிறை காக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை”

என்னும் கொள்கையைச் சிறிதும் சிந்தித்திலர். தம் வீட்டிற்க்கு விருந்தினராக வந்தவர் ஆண்களாயின் அவர்களைப் பாராமல் தமக்கென அமைந்த அறைகளில் கரந்து உறைவர். விருந்துக்கு உகந்தவைகளை வேலையாட்கள் செய்து வைப்பர். வீதியில் இம் மாதர்கள் உலாவச் சென்றபோது இவர்களுக்குக் காவலாக அடிமைகள் உடன் வந்து கொண்டிருப்பர். பெண்கள் உரிமை இவர்கள் நாட்டில் இல்லை போலும் !

இளைய சிறுமி, தாயின் பாதுகாப்பில் வளர்க்கப்பட்டு வருவாள். தாய் அச் சிறுமிக்கு வீட்டு வேலைகளைச் செம்மையுறச் செய்யும் பழக்கத்தை ஊட்டி வருவாள். ஸ்பார்ட்டன் நகரச் சிறுமியர் விளையாட்டில் பங்கு கொள்வது போல் ஏதென்ஸ் நகரச் சிறுமியர் பங்கு கொள்வதில்லை. இப்பெண்களைக் காண வேண்டுமானால் மலர்க் கூடைகள் ஏந்திச் செல்லும் போதும், நீர்க்குடங்களைத் தாங்கிப் போகும் போது மட்டும் காணலாம். ஏதென்ஸ் நகரப் பெண்கள் மணமின்றி வாழ்வு நடத்துவது பெரிய இழுக்காக இவர்கள் இடையே கருதப்பட்டது. திருமணம் பெற்றோர் விருப்பத்திற்கிணங்க முடிவு பெறும். திருமணத்தின் போது மணமகளின் நண்பர்களாகிய நங்கைமார்கள் வெகுமதிகள் பல தருவர்.