பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

கால் பந்தாட்டம்


காப்பாளர்கள் வழங்குகின்ற பந்தைப் பெற்றுக் கொண்டு தன் சக ஆட்டக்காரர்களுக்கு வழங்கியும், வாங்கியும், தாக்கியும், தூக்கியும், சமாளித்தும் பந்தை ஆடி சகல முயற்சிகளிலும், சாகசங்களிலும் ஈடுபட்டு, வெற்றி எண் பெற வேண்டியதைப் பெறும் பொறுப்பு இவருடையதாகவே இருக்கிறது.

உள்ளெறிதல், தனி உதைகள், முனை உதை போன்றவற்றில் இருந்து பந்தைப் பெற்று, எதிர்க் குழுவினரைக் குழப்புகின்ற அளவுக்கு தம் குழு உட்புற வெளிப்புற முன்னாட்டக்காரர்களுக்கும் பந்தை மாற்றி ஆட இருப்பதால், முன்னே கூறிய எல்லா திறன் நுணுக்கங்களிலும் இவர் மேம்பட்டு இருக்க வேண்டும்.

ஆ) உட்புற முன்னாட்டக்காரர்கள் (Left in - Right in)

இவர்கள் விரைவோட்டக்காரர்களாகவும், விவரம் புரிந்தவர்களாகவும், பந்தைத் தேவையான பொழுது தேவையான இடத்தில் தடுத்து நிறுத்தும் சிறப்புத்தன்மை நிறைந்தவர்களாகவும், இரண்டு கால்களாலும் எந்தச் சமயத்திலும் மாறி மாறி உதைத்தாடும் ஆற்றலில் சிறந்தவர்களாகவும், தரையில் அல்லது உயரத்தில் பந்து வந்தாலும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திறமைசாலிகளாகவும், கொஞ்சம் வாய்ப்புக் கிடைத்தாலும் குறியுடன் பந்தை இலக்கினுள் உதைத்துவிடக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.

பந்தைக் காலால் தடுத்து நிறுத்துகின்ற நேர உணர்வும் (Time Sense) ஓடிய வேகத்தை உடனே கட்டுப்படுத்தி நிற்கக்கூடிய நிதானமும், உடல் கட்டுப்பாடும் மிக அவசியம்.