பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

59


அல்லது 8 அடி தூரத்திற்குள் விழுமாறு அடித்தால்தான், மற்ற முன்னாட்டக்காரர்கள் ஓடி தலையாலிடித்துப் பந்தை இலக்கிற்குள் செலுத்த ஏதுவாக இருக்கும். ஆகவே, எப்பொழுதும் இலக்கின் இரண்டாவது கம்பத்தை நோக்கியே பந்தை உதைக்க வேண்டும். (முதல் கம்பம் என்பது உதைத்தாடுபவருக்கு அருகாமையில் உள்ள இலக்குக் கம்பமாகும்.)

முனை உதை எடுக்கும் பொழுதும் இவ்வாறு தான் பந்தை உதைக்க வேண்டும். இலக்குக் காவலர் பந்தை எட்டிப் பிடிக்கவோ, தாவிப் பிடிக்கவோ முடியாத அளவுக்கு பந்தை உதைத்தாடுவதுடன், காவலரின் தலைக்கு மேலே பந்து போவது போலவோ, அல்லது பாங்கர் ஓடி வந்து தலையாலிடித்து ஆடும் வகையிலோ தான் பந்தை உதைத்தாட வேண்டும்.

முன்னேறிப் போகும் முன்னாட்டக்காரர்கள் பந்தைத் தடுக்கும் குழு ஆட்டக்காரர்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் ஆடுகின்றார்கள் என்று அறிந்தவுடன் அவர்களது காவல் கவனத்தைத் திசை திருப்ப, அவர் தடுக்கும் முறையை உடைத்துவிட, பின்புறமுள்ள தமது (மைய) இடைக்காப்பாளருக்குத் தந்து, அவ்வாறே பாங்கருக்கும் வழங்கி சூழ்நிலையை மாற்றி ஆடிவிட வேண்டும். இதற்குக் குழு ஒற்றுமை அதிகம் தேவையாகும்.

அ) மைய முன்னாட்டக்கார்(Centre -Forward)

ஆட்டத்தின் நோக்கம் எதிர்க்குழு இலக்கிற்குள் விதியுடன் பந்தை செலுத்துவது, வெற்றி எண் பெறுவது என்பதால், அந்த மிகவும் பொறுப்பான இடத்தை மைய முன்னாட்டக்காரரே வகிக்கின்றார்.